Posted in

காணாமல் போன செஞ்சி சிறுமி : தீபாவளிப் புத்தாடையோடு காத்திருக்கும் தாய் பவானி!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு – பவானி தம்பதியரின் 7 வயது மகள் ஹேமலதா, கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி இரவு தனது பிறந்தநாளைக் குடும்பத்தினருடன் கொண்டாடிவிட்டு உறங்கச் சென்றுள்ளார். மறுநாள் அக்டோபர் 12-ஆம் தேதி அதிகாலை முதல் சிறுமியைக் காணவில்லை என பெற்றோரால் புகார் அளிக்கப்பட்டது. சிறுமி மாயமாகி 22 நாட்கள் கடந்துள்ள நிலையிலும், அவளது இருப்பிடம் குறித்து இதுவரை எந்த உறுதியான தகவலும் கிடைக்கப்பெறவில்லை.

தமிழகமே தீபாவளிப் பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாடிய வேளையில், சிறுமி ஹேமலதாவின் வீட்டில் சோகம் நிலவியது. “என் பிள்ளை நிச்சயம் உயிருடன் மீண்டு வருவாள்” என்ற நம்பிக்கையோடு, மகளுக்காகத் தீபாவளிப் புத்தாடை வாங்கி வைத்துவிட்டு அவரது புகைப்படத்தைப் பார்த்தபடி தாய் பவானி காத்துக் கொண்டிருக்கிறார். மேலும், “எங்களுக்குப் பணமோ புகழோ தேவையில்லை, என் மகளை உயிருடன் மீட்டுத் தந்தால் போதும்” என்று தாய் பவானி ஊடகங்களிடம் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

தொடக்கத்தில் உள்ளூர் போலீசார் விசாரித்து வந்த இந்த வழக்கு, பின்னர்க் காவல் துறையின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவான சிபிசிஐடி (CB-CID) விசாரணைக்கு மாற்றப்பட்டது.

தற்போது சிபிசிஐடி போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சிறுமி ஹேமலதாவை விரைந்து மீட்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது.