தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி அளவில் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமணி மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின்படி, நவம்பர் 2-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி மாலை 5 மணி வரை அவரை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், அவரது இரண்டு நாள் காவல் விசாரணை இன்றுடன் முறைப்படி நிறைவடைந்துள்ளது.
சென்னை டி.நகரில் முத்துக்குமார் என்பவரால் நடத்தப்பட்டு வந்த நிறுவனம் மூலமாக நடைபெற்ற பணப் பரிவர்த்தனைகள் குறித்து அன்பில் மகேஷிடம் விரிவான விசாரணை நடத்தப்பட்டது. மேலும், பள்ளி கல்வித்துறை இயக்குநரகம் அமைந்துள்ள டிபிஐ (DPI) வளாகம் மற்றும் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலும் கேள்விகள் கேட்கப்பட்டன. இவ்வழக்கு தொடர்பாக ஏற்கனவே 250-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் காவல்துறையினர் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.
காவல் விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அன்பில் மகேஷ் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
மருத்துவச் பரிசோதனை முடிவடைந்ததும் அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அடுத்தகட்ட சிறைக்காவலுக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.