மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் ஏவுகணைகளில் இரசாயன ஆயுதங்களை அமைத்துத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு வருவதாக இஸ்ரேல் புலனாய்வு அமைப்புகள் அமெரிக்க அதிகாரிகளுக்கு இரகசிய எச்சரிக்கை விடுத்துள்ளதாக தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக அமெரிக்க அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட சந்திப்புகளின் போது, ஈரானின் அணுசக்தி திட்டங்களை விட இந்த இரசாயன ஆயுதப் பயமுறுத்தல் மிகவும் அவசர கவனத்திற்குரியது என இஸ்ரேலிய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஏவுகணைகள், ட்ரோன்கள் அல்லது எல்லை கடத்தல் மூலமாக இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்த ஈரான் தொழில்நுட்பங்களை விரைவுபடுத்தி வருவதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
இருப்பினும், இஸ்ரேலின் இந்த உளவுத்துறை தகவலை அமெரிக்காவின் சில உயர் அதிகாரிகள் மற்றும் வளைகுடா நாடுகளின் பிரதிநிதிகள் சந்தேகத்துடனேயே அணுகுகின்றனர். பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தை மீண்டும் ஈரானுக்கு எதிரான பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்காகவே இத்தகைய தகவல்களைப் பரப்புவதாக சில அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனர். அதேவேளையில், இரசாயன ஆயுத ஆராய்ச்சி ஈரானிடம் நீண்டகாலமாக இருந்தாலும், அவற்றை உடனடியாகப் பயன்படுத்தும் நோக்கம் உள்ளதா என்பதில் கருத்து வேறுபாடுகள் நீடிக்கின்றன.
இஸ்ரேலின் இந்த குற்றச்சாட்டுகளை ஈரான் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளதோடு, இது நெதன்யாகு அரசு நடத்தும் உளவியல் போரின் ஒரு பகுதி என்று தெரிவித்துள்ளது.
தற்போது அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் ஈரானின் நகர்வுகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் அளித்த எச்சரிக்கையின் உண்மைத்தன்மை குறித்தும், பிராந்தியப் பாதுகாப்பு உத்திகள் குறித்தும் அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.