கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நிகழ்ந்த நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இந்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை ரத்து செய்ததை அடுத்து, அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்றத்தின் ரத்து உத்தரவுக்குத் தடை விதிக்கப்பட்டு இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டது.
குடும்பத்தின் ஒரே ஆதரவை இழந்தவர்களுக்கு அரசுப் பணி மூலம் வாழ்வாதார ஆதரவு அளிப்பது அரசின் கடமை அல்லவா என்று விசாரணையின் போது உச்ச நீதிமன்ற அமர்வு கேள்விகளை எழுப்பியது. மேலும், நீண்டகாலமாக அரசுப் பணிக்காகக் காத்திருக்கும் பிற மனுதாரர்களின் நலனைக் சுட்டிக்காட்டி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து விரிவான ஆய்வு தேவை எனத் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, வழக்கு தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் பதில் மனுவை தாக்கல் செய்வதற்குத் தமிழக அரசுக்கு 4 வார காலம் அவகாசம் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தற்காலிக ஆறுதலையும் அரசு வேலை கிடைப்பதற்கான நம்பிக்கையையும் அளித்துள்ளது.
அரசு தாக்கல் செய்யவுள்ள பதில் மனு மற்றும் பிற தரப்பு வாதங்களின் அடிப்படையில், 4 வாரங்களுக்குப் பிறகு இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் அடுத்தகட்ட விசாரணையை மேற்கொள்ளவுள்ளது.