தென்கிழக்கு உக்ரைனின் ஜபோரிழியா மாவட்டத்தில் அமைந்துள்ள கோமிஷுவாக்கா (Komyshuvakha) கிராமத்தில் உள்ள பள்ளி கட்டிடம் மீது ரஷ்ய ராணுவம் வழிகாட்டப்பட்ட வான்வழி வெடிகுண்டுகளை (KAB) வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது. நிவாரண உதவிகளைப் பெற பொதுமக்கள் திரண்டிருந்த அந்தப் பள்ளியின் மீது 9 குண்டுகள் வீசப்பட்டதாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்தனர். நிவாரணப் பொருட்கள் விநியோக மையமாகவும் காப்பகமாகவும் செயல்பட்டு வந்த அந்தப் பள்ளி கட்டிடம் இத்தாக்குதலில் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது.
தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, இந்தச் கொடூரமான தாக்குதலுக்கு சர்வதேச சமூகம் வலுவான பதிலை அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். “தீமைக்கு உரிய பதில் அளிக்கப்படாவிட்டால் அது மேலும் முன்னகர்ந்து கொண்டே இருக்கும்” என்று தெரிவித்த அவர், உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளை உடனடியாக வழங்கி ஆதரவளிக்க வேண்டும் என நட்பு நாடுகளிடம் வலியுறுத்தினார். உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் டிஎன்ஏ (DNA) மாதிரிகளைச் சேகரித்து வருகின்றனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளின் போது கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து மேலும் பல உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இடிபாடுகளுக்கு அடியில் 30-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், மீட்புக் குழுவினர் தேடுதல் நடவடிக்கையைத் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றனர்.