இங்கிலாந்தில் உள்ள ஹாம்ப்ஷயர் (Hampshire) பகுதியில் நேஷனல் போலீஸ் ஏர் சர்வீஸ் (NPAS) அமைப்பைச் சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று இரவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டது. அப்போது விண்வெளியில் அந்த ஹெலிகாப்டர் பயணித்த பாதையானது, பொது விமானக் கண்காணிப்பு தளங்களில் விசித்திரமான முறையில் வரைபடமாகப் பதிவானது. இந்த ஹெலிகாப்டரின் விமானப் பாதை ஒரு குறிப்பிட்ட பிறப்புறுப்பு வடிவத்தை ஒத்திருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி விவாதங்களை எழுப்பியது.
ஹெலிகாப்டரின் சத்தத்தால் தூக்கம் கலைந்த ஃபிளீட் பகுதியைச் சேர்ந்த கோர்டன் பேர்ட் (Gordon Bird) என்பவர், விமானக் கண்காணிப்புச் செயலியைப் பார்த்தபோது இந்த வரைபடத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகத் தெரிவித்துள்ளார். காவல் துறையின் வளங்கள் மற்றும் நிதி இவ்வாறு வீணடிக்கப்படுவது வருத்தமளிப்பதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும் இது வேண்டும் என்றே திட்டமிட்டு வரையப்பட்டது போல் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள காவல் வான்வழி சேவை (NPAS) அதிகாரிகள், இது முழுக்க முழுக்கத் தற்செயலாக அமைந்த ஒரு சம்பவம் என்று தெளிவுபடுத்தியுள்ளனர். நிற்காமல் சென்ற ஒரு வாகனத்தைத் தேடும் பணியில் டேம்ஸ் வேலி காவல் துறைக்கு (Thames Valley Police) ஆதரவாக மட்டுமே இந்த ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.
தரைக்கட்டுப்பாட்டு மையத்தின் வழிகாட்டுதலின்படியே ஹெலிகாப்டர் வட்டமிட்டதாகவும், முன்கூட்டியே திட்டமிடப்பட்ட வழியில் பறக்கவில்லை என்றும் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
பொதுமக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள காவல் துறை, ரோந்துப் பணிகள் வழக்கமான முறையில் தொடரும் எனத் தெரிவித்துள்ளது.