Posted in

செஞ்சி சிறுமி வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் பெண் புகார்!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி மாயமான நிலையில், இவ்வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்நிலையியல், நாமக்கல் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த அங்கன்வாடி சமையலர் பவானி என்பவர், சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோயிலில் அச்சிறுமியைப் போன்ற தோற்றமுடைய குழந்தையை வயதான தம்பதியருடன் பார்த்ததாகக் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக நாமக்கல் விரைந்த சிபிசிஐடி காவல்துறையினர், தகவல் தெரிவித்த பவானியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தனக்குச் சிறுமியைப் பற்றித் தகவல் அளித்த நபர் யார் என்றும், எதற்காகக் காவல்துறையைக் குழப்புகிறீர்கள் என்றும் கூறித் தனது தனிப்பட்ட நடத்தையைக் கொச்சைப்படுத்தும் வகையில் கேள்விகளைக் கேட்டு அசிங்கப்படுத்தியதாகப் பவானி குற்றம்சாட்டியுள்ளார். நல்ல எண்ணத்துடன் காவல்துறைக்குத் தகவல் அளித்த தனக்கு இந்த விசாரணையால் கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

காவல்துறையின் இந்த நடவடிக்கை குறித்துப் பவானி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கத் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மற்றொரு புறம், சிறுமி ஹேமலதாவைத் தேடும் பணிகளைப் பல்வேறு கோணங்களில் சிபிசிஐடி அமைப்பினர் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றனர்.