தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ், சாதியக் காரணங்களால் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், முதன்மை குற்றவாளியான சுர்ஜித்தின் பெற்றோர் சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. இருப்பினும், இவர்களுக்கு எதிரான் போதிய நேரடி ஆதாரங்கள் இல்லை என்றும், அனுமானங்களின் அடிப்படையில் மட்டுமே குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து, அவர்கள் மீதான குற்றப்பத்திரிகையை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை முன்னதாக ரத்து செய்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவில் தலையிட வேண்டிய அவசியமில்லை எனக் கூறி, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. இதன் மூலம் சுர்ஜித்தின் பெற்றோர் மீதான விடுதலை உத்தரவு உறுதி செய்யப்பட்டுள்ளது.
காவல்துறை உதவி ஆய்வாளர்களான சுர்ஜித்தின் பெற்றோர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கு எதிராகப் பாதிக்கப்பட்ட கவினின் குடும்பத்தினரும் ஆதரவாளர்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில், வழக்கில் முதன்மை குற்றவாளியான சுர்ஜித் மற்றும் அவருக்கு உதவிய உறவினர் ஜெயபால் ஆகியோர் மீதான வழக்கு விசாரணை சட்டப்படி தொடர்ந்து நடைபெறும் எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.