Posted in

கூடுதல் செலவைக் குறைக்க 5 நாடுகளுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை விரிவாக்கிய கூகுள்!

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மேகக்கணி கணினி (Cloud Computing) பிரிவுகளில் முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கில், கூகுள் நிறுவனம் தனது விருப்ப ஓய்வு திட்டத்தை (Voluntary Exit Programme) மேலும் 5 நாடுகளுக்கு விரிவாக்கியுள்ளது. முன்னதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள ஊழியர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நிறுவனத்தின் செலவினங்களைக் கட்டுப்படுத்தி, வளங்களை முக்கியமான திட்டங்களுக்குப் பயன்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் இத்திட்டம் சர்வதேச அளவில் விரிவுபடுத்தப்பட்டதாகக் கூகுள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், கூகுள் க்ளவுட் (Google Cloud) மற்றும் ஏஐ ஆராய்ச்சிப் பிரிவான டீப்மைண்ட் (DeepMind) ஆகிய முன்னுரிமை பெற்ற பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இந்த விருப்ப ஓய்வு திட்டம் பொருந்தாது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மைக்கிராசாப்ட் நிறுவனமும் இதேபோன்ற பணியாளர் சீரமைப்பு நடவடிக்கைகளைச் சமீபத்தில் மேற்கொண்டதைத் தொடர்ந்து கூகுளும் இத்தகைய திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

தொழில்நுட்பத் துறையில் அதிகரித்து வரும் ஏஐ போட்டி காரணமாக, பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் நிதி மற்றும் மனிதவளங்களை மறுசீரமைத்து வருகின்றன. இந்த விருப்ப ஓய்வு திட்டத்தைத் தேர்வு செய்யும் ஊழியர்களுக்கு அவர்களின் பணி அனுபவத்தின் அடிப்படையில் இழப்பீட்டுத் தொகை (Severance Package) வழங்கப்படுகிறது. விருப்ப ஓய்வை ஏற்றுக்கொள்ளும் ஊழியர்கள் அடுத்த சில மாதங்களில் நிறுவனத்தில் இருந்து வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளாவிய பொருளாதாரச் சூழல் மற்றும் ஏஐ உள்கட்டமைப்புக்கான அதிக செலவினங்கள் காரணமாகத் தொழில்நுட்ப நிறுவனங்களின் இந்த மனிதவள சீரமைப்பு தொடர்கிறது.

வரும் காலாண்டுகளில் புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் வளங்களின் பங்கீடு எவ்வாறு மாற்றி அமைக்கப்படும் என்பதைத் துறை சார்ந்த வல்லுநர்கள் கவனித்து வருகின்றனர்.