Posted in

கமல்ஹாசனின் ‘சண்டியர்’ படத் தலைப்பு சர்ச்சை: 23 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் எழுந்த விவாதம்!

இயக்குநர் எஸ்.யு. அருண் குமார் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்திற்கு ‘சண்டியர்’ எனப் தலைப்பிடப்பட்டு முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக 2003-ஆம் ஆண்டில் கமல்ஹாசன் இயக்கத்தில் வெளியான திரைப்படத்திற்கு ‘சண்டியர்’ என்றுதான் முதலில் பெயரிடப்பட்டு போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. எனினும், அந்தத் தலைப்பு தென் மாவட்டங்களில் சாதி மோதல்களையும் வன்முறையையும் தூண்டும் வகையில் அமைந்துள்ளதாகப் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பாதுகாப்பு கோர கமல்ஹாசன் முயன்ற நிலையில், நீண்டகால பாதுகாப்பு அளிக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது. சட்ட ஒழுங்குப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு கமல்ஹாசன் தனது படத் தலைப்பை ‘விருமாண்டி’ என மாற்றினார். 2004-ல் வெளியான விருமாண்டி திரைப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்த போதிலும், அத்தலைப்பு மாற்றம் தமிழ் சினிமாவில் முக்கிய நிகழ்வாகக் கருதப்பட்டது.

தற்போது கமல்ஹாசனின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு மீண்டும் அதே ‘சண்டியர்’ தலைப்பு அறிவிக்கப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் கலந்த விவாதங்களைத் தோற்றுவித்துள்ளது.

எஸ்.யு. அருண் குமார் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவாகும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

பழைய சர்ச்சை முடிவுக்கு வந்த நிலையில், இப்புதிய திரைப்படத்தின் போக்கையும் அமையவுள்ள கதாபாத்திர அமைப்பையும் திரையுலகினர் ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர்.