சென்னை வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் (MRTS) நீட்டிப்பு வழித்தடத்தில் கடந்த மார்ச் மாதம் ரயில் சேவைகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டன. இருப்பினும், வழித்தடத்தில் அமைந்துள்ள ஆதம்பாக்கம் ரயில் நிலையத்தில் 8 மாதங்கள் கடந்த நிலையிலும் ரயில்கள் நிற்காமல் கடந்து செல்கின்றன. ரயில் நிலையத்தின் வளைவுப் பகுதியில், ரயில் பெட்டிகளுக்கும் நடைமேடைக்கும் இடையே ஆபத்தான அளவில் கூடுதல் இடைவெளி நிலவுவதே இதற்கு முக்கியக் காரணமாகும்.
ரயிலில் ஏறும்போதும் இறங்கும்போதும் பயணிகள், குறிப்பாக முதியவர்கள் மற்றும் குழந்தைகள் தவறி கீழே விழும் ஆபத்து உள்ளதால், ரயில்வே பாதுகாப்பு ஆணையம் இந்த நிலையத்தில் ரயில்களை நிறுத்த ஒப்புதல் வழங்கவில்லை. அனுமதிக்கப்பட்ட அளவை விட 20 சென்டிமீட்டர் வரை கூடுதல் இடைவெளி இருப்பது ஆய்வின் போது சுட்டிக்காட்டப்பட்டது. இந்தப் பிரச்சினையைச் சரிசெய்யும் வகையில் தென்னக ரயில்வே திருத்தப்பட்ட வடிவமைப்பு முன்மொழிவுகளைத் தயாரித்து, ரயில்வே வடிவமைப்பு மற்றும் தரநிலை அமைப்பிற்கு (RDSO) அனுப்பியுள்ளது.
பணிகள் அனைத்தும் முடிந்த பின்னரும் தங்களது பகுதியில் ரயில்களைப் பயன்படுத்த முடியாத சூழல் நிலவுவது அப்பகுதி மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பயணிகள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பிறகே நிலையத்தைத் திறக்க முடியும் என்பதால், நவீன மென்பொருள் சிமுலேஷன் உதவியுடன் தீர்வுகளைத் தென்னக ரயில்வே தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. உரிய ஆய்வுகளுக்குப் பிறகே இப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்டிஎஸ்ஓ அமைப்பிடமிருந்து பெறப்படும் ஒப்புதல் மற்றும் பாதுகாப்புத் தலைமை ஆணையரின் இறுதி வழிகாட்டல்களுக்குப் பிறகே களத்தில் மறுசீரமைப்புப் பணிகள் தொடங்கப்படும்.
இந்த வடிவமைப்புத் திருத்தப் பணிகள் நிறைவடைந்த பின்னரே ஆதம்பாக்கம் ரயில் நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்படும்.