Posted in

இஸ்ரேல் தேர்தல் முன் ஈரானைத் தாக்க நெதன்யாகு திட்டம்: அமெரிக்கா தடுத்ததாக ஊடக அறிக்கை!

இஸ்ரேலில் நடைபெற்ற பொதுத்தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்பாக ஈரான் மீது ராணுவத் தாக்குதல் ஒன்றை முன்னெடுக்கப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தீவிர முயற்சி மேற்கொண்டதாக ஊடக தகவல்கள் வெளிவந்துள்ளன. புதிதாகப் பொறுப்பேற்ற மொசாத் அமைப்பின் தலைவர் ரோமன் கோஃப்மேனின் ஆதரவுடன் இந்த நடவடிக்கை திட்டமிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அமெரிக்க அதிகாரிகள் தலையிட்டு இந்தத் தாக்குதல் திட்டத்தை தடுத்து நிறுத்தியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல் ராணுவத்தின் தலைமைத் தளபதி இயால் ஜமீர் உள்ளிட்ட முன்னணிப் பாதுகாப்பு அதிகாரிகள் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இத்தகைய தாக்குதல் ஈரான் உடனான போரை மேலும் தீவிரமாக்குவதோடு, தேர்தல் தேதியையும் ஒத்திவைக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும் என ராணுவத் தலைவர்கள் எச்சரித்தனர். இருப்பினும், தாக்குதலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில், இஸ்ரேலிய அதிகாரி ஒருவரின் நடவடிக்கையால் அமெரிக்காவிற்குத் தகவல் தெரிந்து, டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊடக அறிக்கைகளை முற்றிலும் மறுத்துள்ள பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகம், தேர்தலுக்கு முன்பாக ஈரான் மீது தாக்குதல் நடத்தும் எண்ணம் எதுவும் தங்களுக்கு இருக்கவில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளது. அதேவேளையில், அரசியல் லாபத்திற்காக ராணுவத்தைப் பயன்படுத்த முற்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தற்போது இஸ்ரேலில் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு சூழல் குறித்து சர்வதேச அளவில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அரசு அமைப்புகள் தரப்பில் இந்தத் ரகசியத் தாக்குதல் திட்டம் குறித்து அதிகாரப்பூர்வ விளக்கங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.