Posted in

“செவ்வாய் இரவு 8 மணி” எப்போதும் கண்டிராத ஒரு தாக்குதலை ஈரான் சந்திக்கும்.

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க தான் விதித்த கெடுவின் இறுதி நேரம் “செவ்வாய்க்கிழமை இரவு 8:00 மணி (அமெரிக்க கிழக்கு நேரப்படி)” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே “நரகம் மழையாய் பொழியும்” என்று எச்சரித்திருந்த டிரம்ப், தற்போது நேரத்தைத் துல்லியமாகக் குறிப்பிட்டிருப்பது, எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் தொடங்கலாம் என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கெடு முடிவடைவதற்குள் ஈரான் இணங்கி வராவிட்டால், அந்த நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் (Power Plants) மற்றும் பாலங்கள் (Bridges) மீது தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் பகிரங்கமாக மிரட்டியுள்ளார். “செவ்வாய்க்கிழமை என்பது ஈரானில் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்களுக்கான நாளாக அமையும்; அங்கே எதுவுமே மிஞ்சாது” என்று அவர் பதிவிட்டுள்ளார். ஈரானின் இந்த முக்கியமான உள்கட்டமைப்புகளைத் தகர்ப்பதன் மூலம் அந்த நாட்டை “கற்காலத்திற்கு” தள்ள அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக இராணுவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அதே சமயம், இந்த விவகாரத்தில் ஒரு பக்கம் மிரட்டல் விடுத்தாலும், மறுபக்கம் ரகசியப் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானுடன் 45 நாட்கள் போர் நிறுத்த உடன்படிக்கை மேற்கொள்வது குறித்து மத்தியஸ்தர்கள் மூலம் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், திங்கட்கிழமை (ஏப்ரல் 6) ஒரு நல்ல முடிவு எட்டப்பட வாய்ப்புள்ளதாகவும் டிரம்ப் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். “அவர்கள் விரைவாக உடன்பாட்டிற்கு வராவிட்டால், நான் அந்த நாட்டின் எண்ணெய் வயல்களைக் கைப்பற்ற வேண்டியிருக்கும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

டிரம்பின் இந்த 48 மணி நேரக் கெடு நாளை இரவு (இந்திய நேரப்படி புதன்கிழமை காலை 5:30 மணி) முடிவடைகிறது. ஒருவேளை அதற்குள் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படாவிட்டால், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரும் என்றும், அமெரிக்கா தனது முழு இராணுவ வலிமையைப் பயன்படுத்தி ஈரானைத் தாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வளைகுடா பகுதியில் அமெரிக்கப் போர்க்கப்பல்கள் குவிக்கப்பட்டுள்ளதால், உலகம் ஒரு மிகப்பெரிய போரின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது.