Posted in

2 கோடி கொடு.. இல்லன்னா சுட்டுக் கொன்றுவோம்! கோவையில் காங்கிரஸ் நிர்வாகி காரில் கடத்தி கொடூரத் தாக்குதல்!

கோவை மாநகரில் காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவர், ஐந்து பேர் கொண்ட மர்மக் கும்பலால் காரில் கடத்தப்பட்டு, துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிடுவதாக மிரட்டப்பட்ட கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடத்தப்பட்ட நபர் தீவிரத் தாக்குதலுக்குப் பிறகு வெள்ளலூர் காட்டுப் பகுதியில் வீசிச் செல்லப்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து கோவை மாநகர போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட நபர் அளித்த பகீர் வாக்குமூலம் கோயம்புத்தூர் அரசியல் மற்றும் தொழில்துறை வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட காங்கிரஸ் நிர்வாகியான தனசேகரன், கோவை எஸ்.எஸ். குளம் பகுதியில் தனக்குச் சொந்தமாகப் புதிய வீடு ஒன்றைக் கட்டி வருகிறார். சம்பவத்தன்று காலை சுமார் 7:45 மணி அளவில், கட்டுமானப் பணிகளைப் பார்வையிடுவதற்காக அவர் தனது காரில் சைட் பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு திடீரென வந்த மாருதி எர்டிகா (Ertiga) கார் ஒன்றிலிருந்து இறங்கிய ஐந்து நபர்கள், “உன் பெயர் தனசேகரனா?” என்று கேட்டு உறுதி செய்துள்ளனர். அவர் ஆமாம் என்று சொன்ன அடுத்த கணமே, அந்த கும்பல் அவசர அவசரமாக அவரது கைகளில் விலங்கு பூட்ட முயன்றுள்ளது.

மர்ம நபர்களின் இந்தத் திடீர் செயலால் அதிர்ச்சியடைந்த தனசேகரன் விலங்கு பூட்டவிடாமல் தடுத்துப் போராடியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கடத்தல் கும்பல், அவரது முகத்திலும் வாயிலும் பலமாக அடித்து, வாயில் துணியைத் திணித்துக் காரின் பின் இருக்கையில் தள்ளிப் போட்டுள்ளது. கூச்சலிட்டால் யாருக்கும் சத்தம் கேட்கக் கூடாது என்பதற்காக காரின் எஞ்சின் மற்றும் ஆடியோ சத்தத்தை முழுமையாக அதிகரித்துக் கொண்டு, ஒண்டிப்புதூர் மேம்பாலம் வழியாகக் கேரளா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காரை அதிவேகமாக இயக்கியுள்ளனர். காரில் வைத்து, “உயிரோடு போக வேண்டும் என்றால் 2 கோடி ரூபாய் பணம் தர வேண்டும், இல்லையெனில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று புதைத்து விடுவோம்” என மிரட்டியுள்ளனர்.

இதற்கிடையே, கடத்தல் கும்பல் தனசேகரனைக் காரில் வைத்தே புகைப்படம் எடுத்து தங்களின் தலைவனுக்கு அனுப்பியபோது, “நாங்கள் தூக்க வேண்டிய ஆள் இவர் இல்லை, ஆள் மாறிவிட்டது” என்ற அதிர்ச்சித் தகவல் வாட்ஸ்அப் மூலம் கிடைத்துள்ளது. இதையடுத்து, தனசேகரனின் செல்போன், சொகுசு கார் சாவி மற்றும் புதிய வீட்டின் சாவி ஆகியவற்றைத் பறித்துக்கொண்ட கும்பல், அவரது வங்கி கணக்கில் இருந்து பணத்தைப் பறிமாற்றம் செய்ய முயன்று தோல்வியடைந்தது. இறுதியில், வெள்ளலூரிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் அவரைத் தள்ளிவிட்டுவிட்டு கும்பல் தப்பியோடியது. அங்கிருந்து தப்பி வந்த தனசேகரன், தற்போது கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *