சவூதி அரேபியாவின் எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் விமான நிலையத்தை இலக்காகக் கொண்டு யேமனின் ஹவுதி அமைப்பினர் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
யேமனில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சிப் படையினர், சவூதி அரேபியாவின் முக்கியமான பொருளாதாரக் கட்டமைப்புகளைக் குறிவைத்து 6 கட்டத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளனர். ஹவுதி அமைப்பின் ராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சாரி எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள தகவலில், சவூதி தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மற்றும் அராம்கோ (Aramco) எண்ணெய் நிறுவனத்தின் சேமிப்புக் கிடங்குகளை இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் தெரிவித்துள்ளார். பாலிஸ்டிக் ஏவுகணைகள், குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் இத்தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
சவூதி அரேபியா யேமன் மீது மேற்கொண்டு வரும் வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக ஹவுதி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ரியாத் தவிர குரைஸ் பகுதியில் உள்ள அராம்கோ வளாகம் மற்றும் தவத்மி பகுதியில் உள்ள பம்பிங் ஸ்டேஷன் ஆகியவை மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனிடையே, சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் இரு குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வழியிலேயே இடைமறித்து அழித்துள்ளதாகத் தெரிவித்துள்ளன.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சவூதி அரேபியா மற்றும் யேமன் எல்லைக் பகுதிகளில் மீண்டும் வான்வழித் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
எண்ணெய் உள்கட்டமைப்புகள் மற்றும் சர்வதேச விமான நிலையங்கள் இலக்கு வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.