Posted in

சட்டப்பேரவையில் தவெக எம்எல்ஏ பேச்சுக்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்

சட்டமன்றத்தில் தவெக எம்எல்ஏ கனிமொழி பேசிய விதம் மற்றும் தவெக அரசின் நிர்வாகச் செயல்பாடுகளைச் சுட்டிக்காட்டி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் கவுண்டம்பாளையம் தொகுதி தவெக எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் உரையாற்றிய போது, சபாநாயகருக்கு நன்றி தெரிவிக்கும் இடத்தில் “மன்மத நன்றி” எனக் குறிப்பிட்டது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியது. இதுகுறித்து அவர் அளித்த விளக்கங்கள் மற்றும் தொடர்ந்து நிலவும் அரசியல் சூழல் தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது அறிக்கையில் விமர்சித்துள்ளார். மக்கள் பிரதிநிதிகள் சட்டமன்றத்தின் கண்ணியத்தைப் பேணாமல் அலட்சியமாகச் செயல்படுவதாக அவர் தனது கண்டனப் பதிவில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகப் பேசிய டிடிவி தினகரன், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சட்டமன்றத்தில் தொகுதிப் பிரச்சினைகளைப் பேசுவதை விட்டுவிட்டு, பொறுப்பற்ற முறையில் பேசுவது ஜனநாயகத்திற்கு அழகல்ல எனக் குறிப்பிட்டுள்ளார். இது மக்கள் நலனுக்கான ஆட்சி அல்ல என்றும், தற்குறிகளின் ஆட்சியாக உருவெடுத்துள்ளது என்றும் அவர் சாடியுள்ளார். சட்டமன்றத்தில் பேசுவதற்குக் குறைந்தபட்ச தயாரிப்புகளோ அல்லது அடிப்படையான அரசியல் அறிவோ இன்றிச் செயல்படுவதை ஏற்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தவெக சட்டமன்ற உறுப்பினரின் பேச்சு மற்றும் அதற்குப் பின்னரான விளக்கங்கள் குறித்து அதிமுக, திமுக மற்றும் அமமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து தங்களது கண்டனப் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். மக்கள் பிரச்சினைகளை மையப்படுத்திச் செயல்பட வேண்டிய மன்றத்தில் இத்தகைய தேவையற்ற விவாதங்கள் எழுவது குறித்து அரசியல் ஆய்வாளர்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

சட்டமன்றத்தில் பேசும் போது உறுப்பினர்கள் கவனத்துடனும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் அரசியல் களத்தில் வலுத்து வருகின்றன.

அதேசமயம், தவெக தரப்பில் இருந்து சட்டமன்றப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் எனக் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.