கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்திகள் அனுப்பியதாகவும், மதுபோதையில் அவரது இல்லத்திற்குச் சென்று தொந்தரவு செய்ததாகவும் செய்திகள் வெளியாகின. இச்சம்பவத்தைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியருக்குத் தனிப் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்பியுமான கனிமொழி தனது எக்ஸ் (X) தளத்தில் அறிக்கை வெளியிட்டுத் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போய்விட்டதாகக் குற்றம்சாட்டிய கனிமொழி, ஒரு சட்டமன்ற உறுப்பினராலேயே மாவட்ட ஆட்சியருக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். தனிப் பாதுகாப்பு அதிகாரியை நியமிப்பதன் மூலம் மட்டும் மாவட்ட ஆட்சியருக்குப் பாதுகாப்பு கிடைத்துவிடாது எனக் குறிப்பிட்ட அவர், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் என்ன பதில் சொல்லப் போகிறார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், திரைக்கவர்ச்சியால் கிடைத்த வெற்றி தந்த அகந்தையில் மக்கள் எல்லாவற்றையும் சகித்துக் கொள்வார்கள் என நினைக்க வேண்டாம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் இந்த விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் கட்சியினர் பலரும் இச்சம்பவத்திற்குக் கண்டனங்களைத் தெரிவித்து வரும் சூழலில், தவெக தரப்பிலிருந்து இந்த குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரப்பூர்வ விளக்கங்கள் எதுவும் வெளியாகவில்லை.