Posted in

பாமக பிரமுகர் கொலை வழக்கு: குடியாத்தம் அருகே தப்ப முயன்ற குற்றவாளி காலில் துப்பாக்கிச்சூடு!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் பாமக பிரமுகர் ஞானவேலு என்பவருக்கும் பூவரசன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் காரணமாகத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஞானவேலு நாட்டுத் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த நிலையில், அவருடன் இருந்த ரகு என்பவரும் படுகாயமடைந்தார். இக்கொலை சம்பவத்தில் தொடர்புடைய பூவரசனைத் தனிப்படை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில் பூவரசனைப் பிடிக்க முயன்றபோது, அவர் உதவி ஆய்வாளரைத் தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்துத் தற்காப்புக்காகக் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பூவரசனின் காலில் குண்டு பாய்ந்து அவர் காயமடைந்தார். இச்சம்பவத்தில் குற்றவாளியைத் தடுக்க முயன்ற காவல் அதிகாரியும் காயமடைந்துள்ளார்.

துப்பாக்கிக் சூட்டில் காயமடைந்த குற்றவாளி பூவரசன் மற்றும் காயமடைந்த காவல் அதிகாரி ஆகியோர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாகக் குடியாத்தம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.