ரஷ்யாவின் கூட்டாட்சி புள்ளியியல் சேவை அமைப்பின் (Rosstat) அதிகாரப்பூர்வத் தரவுத்தளத்தில் இருந்து 1.1 கோடிக்கும் அதிகமான இறப்புச் சான்றிதழ் விவரங்களை ஹேக்கர்கள் கைப்பற்றித் தரவுகளை வெளியிட்டுள்ளனர். ‘சைலண்ட் க்ரோ’ மற்றும் ‘சைபர் பார்ட்டிசன்ஸ்’ ஆகிய ஹேக்கர் குழுக்கள் மேற்கொண்ட இந்தத் தரவு கசிவு ஆய்வில், 2022 பிப்ரவரி முதல் 2026 ஆகஸ்ட் வரையிலான காலத்தில் சுமார் 3,93,000 முதல் 4,50,000 வரையிலான ராணுவத்தினரின் இறப்புகள் நேரடியாக போருடன் தொடர்புடையவை எனப் பதிவாகியுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நவீன ரஷ்ய வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த உயிரிழப்புகள் அமைந்துள்ளதாகச் சர்வதேச ஊடக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக 2024 பிற்பகுதி மற்றும் 2025-2026 ஆம் ஆண்டுகளில் மாதத்திற்கு 15,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியாகியுள்ளனர், அதாவது நாளொன்றுக்கு சராசரியாக 500-க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாகத் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து ரஷ்யாவின் ரோஸ்ஸ்டாட் அமைப்பு இணையவழித் தாக்குதல் நடந்ததை உறுதி செய்த போதிலும், தரவுகள் கசிந்ததை அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது.
ரஷ்யாவில் நிலவும் மக்கள் தொகை இழப்பு மற்றும் போர்க்கள நிலவரம் குறித்த புதிய விவாதங்களை இந்தத் தரவு கசிவு ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைமையில் உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகள் தீவிரமடைந்து வரும் வேளையில், இந்த உயிரிழப்பு விவரங்கள் போரின் போக்கில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.