Posted in

ரூ.1.50 கோடி கொள்ளை: காரை கடத்தி மர்ம கும்பல் சதி

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் டாஸ்மாக் கடைகளின் தினசரி வசூல் பணம் ரூ.1.50 கோடியை மர்ம நபர்கள் சினிமா பாணியில் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில் வசூலாகும் பணத்தைச் சேகரித்து வங்கியில் டெபாசிட் செய்யும் பணியில் வங்கி முகவர் தாஸ் மற்றும் ஓட்டுநர் அபீப் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் சுமார் 22 டாஸ்மாக் கடைகளில் வசூலான ரூ.1.50 கோடி பணத்துடன், ஒரகடத்தில் உள்ள 23-வது கடைக்குச் சென்றனர். அப்போது முகவர் தாஸ் கடைக்குள் சென்ற நிலையில், ஓட்டுநர் அபீப் மட்டும் காரில் காத்திருந்தார்.

அந்தச் சமயத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர், கார் தனது வாகனத்தின் மீது மோதிவிட்டதாகக் கூறி ஓட்டுநர் அபீப்பிடம் வீண் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட 3-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் கொண்ட கும்பல், பணத்துடன் இருந்த காரை திடீரெனக் கடத்திச் சென்று தப்பினர். பின்னர் படப்பை அருகே கரணித்தாங்கல் பகுதியில் காரை நிறுத்திவிட்டு, அதில் இருந்த ரூ.1.50 கோடி பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒரகடம் காவல்துறையினர் காரை மீட்டு ஆய்வு செய்ததில், காரின் அருகில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த ரூ.18 லட்சம் பணத்தைக் கைப்பற்றினர். காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ். அரவிந்த் உத்தரவின் பேரில், குற்றவாளிகளைப் பிடிக்கத் துணைக்காவல் கண்காணிப்பாளர் கீர்த்திவாசன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கொள்ளைச் சம்பவம் நடந்த பகுதி மற்றும் கார் கடத்தப்பட்ட பாதைகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.