கன்னியாகுமரி அருகே காவல் உதவி ஆய்வாளரை மிரட்டிய குற்றச்சாட்டில் தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டதையடுத்து, காவல் நிலையத்தை அக்கட்சியினர் முற்றுகையிட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள வள்ளவிளை பகுதியில் காவல் துறையினர் பணியில் இருந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகி ஒருவர் பணிசெய்ய விடாமல் தடுத்துச் சிறப்பு உதவி ஆய்வாளரை வீடியோ எடுத்து மிரட்டியதாகக் கூறப்படுகிறது. பணி செய்ய விடாமல் இடையூறு ஏற்படுத்தி மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டின்கீழ், சம்பந்தப்பட்ட தவெக நிர்வாகியைக் காவல் துறையினர் நேற்றிரவு கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரை காவல் வாகனத்தில் ஏற்றி அழைத்துச் செல்ல முயன்றபோது, அவரை விடுவிக்கக் கோரி தவெக தொண்டர்கள் திரண்டு வந்து காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், இந்த நிலையைக் கண்டித்து கொல்லங்கோடு காவல் நிலையத்தை தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திடீரென முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையைச் சீரமைத்தனர். கைதான தவெக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு கொல்லங்கோடு காவல் நிலையப் பகுதியில் கூடுதல் காவலர்கள் குவிக்கப்பட்டு நிலைமை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.