மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணை வழியில் வணிகக் கப்பல்கள் சென்று வர இரான் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில், தடை செய்யப்பட்ட கடல் வழியைப் பயன்படுத்தி இரகசியமாகச் செல்ல முயன்ற இரு பெரிய எண்ணெய் டேங்கர் கப்பல்கள் தீப்பிடித்து எரிவதாக இரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல் படை (IRGC) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தில் ஒரு சூப்பர் டேங்கர் கப்பல் கடலில் வைக்கப்பட்டிருந்த கடற்படை கண்ணிவெடியில் (Naval mine) மோதி வெடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது டேங்கர் கப்பல், அமெரிக்க ராணுவ விமானங்களின் பாதுகாப்போடு சட்டவிரோதப் பாதையில் ரகசியமாகக் கடக்க முயன்ற போது விபத்துக்குள்ளாகி தீப்பற்றியதாக இரான் தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான இரண்டு கப்பல்களும் தங்களது இருப்பிடத்தைக் காட்டும் ரேடார் மற்றும் வழிசெலுத்தல் அமைப்புகளை (Navigation systems) அணைத்துவிட்டுப் பயணித்துள்ளன. எனினும், பாதிக்கப்பட்டுள்ள கப்பல்களின் பெயர்கள், அதில் பயணித்த ஊழியர்களின் நிலை அல்லது உயிரிழப்புகள் குறித்த விவரங்களை இரான் தரப்பு முழுமையாக வெளியிடவில்லை.
நடப்பு நவம்பர் மாதத்தில் மட்டும் ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட சர்வதேசக் கப்பல்கள் மற்றும் டேங்கர்கள் இதுபோன்ற தாக்குதல்களுக்கும் விபத்துகளுக்கும் ஆளாகியுள்ளதாகக் கடல்சார் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள சூழலில், அனுமதி மறுக்கப்பட்ட கடல் வழிகளைப் பயன்படுத்தும் கப்பல்கள் மீது இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என இரான் எச்சரித்துள்ளது.
தற்போது ஹார்முஸ் நீரிணையில் பதற்றம் அதிகரித்துள்ளதை அடுத்து, சர்வதேசக் கடல் வழியில் கப்பல் போக்குவரத்தைக் கண்காணிக்க அமெரிக்கப் படைகள் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.