அமெரிக்காவிலிருந்து ஈரானியக் குடியேறிகளை ஏற்றிச் சென்ற நாடு கடத்தல் விமானத்தை பாகிஸ்தான் நாட்டுக்குள் அனுமதிக்க மறுத்ததால், அவ்விமானம் மீண்டும் அமெரிக்காவிற்கே திருப்பியனுப்பப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள மேசா நகரில் இருந்து குறைந்தபட்சம் 9 ஈரானியக் குடியேறிகளை ஏற்றிச் சென்ற விசேட அமெரிக்க நாட்டு கடத்தல் விமானம் ஒன்று புறப்பட்டது. அமெரிக்காவிற்கு ஈரானுடன் நேரடி தூதரக உறவுகள் இல்லாததால், பாகிஸ்தான் வழியாக அவர்களை ஈரான் கொண்டு செல்ல அமெரிக்க நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. எனினும், பாகிஸ்தானில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதால், புறப்பட்ட 30 நிமிடங்களிலேயே அவ்விமானம் மீண்டும் அரிசோனாவிற்கே திருப்பியனுப்பப்பட்டு, கைதிகள் காவலில் அடைக்கப்பட்டனர்.
அமெரிக்காவில் தஞ்சமடையக் கோரி விண்ணப்பித்த ஈரானியர்களின் தகவல்கள் இரகசியமாகப் பகிரப்பட்டதாகக் கூறி வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில், இந்த நாடு கடத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் இச்சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வ கருத்து எதையும் தெரிவிக்க மறுத்துவிட்டது. சமீபத்திய நாட்களில் அரிசோனாவிலிருந்து ஈரானியர்களை நாடு கடத்த மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மூன்றாம் நாடுகளின் வழியாகக் குடியேறிகளை நாடு கடத்தும் அமெரிக்க நிர்வாகத்தின் திட்டம் இந்தத் தடையினால் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
தற்போது கைதிகள் மீண்டும் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க நீதிமன்றங்களின் உத்தரவுகள் மற்றும் சட்டப் போராட்டங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும்.