Posted in

கமல்ஹாசனின் ‘சண்டியர்’ தலைப்பு விவகாரம்: 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெடித்த சர்ச்சை

கமல்ஹாசனின் புதிய படத்திற்கு ‘சண்டியர்’ என தலைப்பிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சாதி மோதல்களைத் தூண்டும் செயல் என விமர்சனங்கள் மீண்டும் எழுந்துள்ளன.

இயக்குனர் எஸ்.யு. அருண் குமார் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கவுள்ள ‘KH237’ திரைப்படத்திற்கு 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‘சண்டியர்’ எனத் தலைப்பிடப்பட்டு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 2003-ஆம் ஆண்டு இதே தலைப்பில் திரைப்படம் எடுக்க கமல்ஹாசன் முயன்ற போது, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இந்தத் தலைப்பு தென் மாவட்டங்களில் வன்முறையையும் சாதிப் பெருமையையும் தூண்டும் எனக் கூறி போராட்டங்கள் அறிவிக்கப்பட்டதால், அப்படத்தின் தலைப்பு ‘விருமாண்டி’ என மாற்றப்பட்டது.

 

 

தற்போது மீண்டும் ‘சண்டியர்’ தலைப்பு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதங்கள் எழுந்துள்ளன. கமல்ஹாசனின் ‘தேவர் மகன்’ மற்றும் ‘விருமாண்டி’ போன்ற திரைப்படங்கள் தென் தமிழகத்தில் சாதி உணர்வைத் தூண்டி வன்முறைச் சம்பவங்களுக்கு வழிவகுத்ததாக இயக்குனர் எசக்கி கார்வண்ணன் சாடியுள்ளார். மேலும் திரைக்கதைகளில் வன்முறையைக் கொண்டாடுவதைத் தவிர்த்து சமத்துவத்தைப் பேண வேண்டும் என இயக்குனர் லெனின் பாரதியும் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

அதேவேளையில், படைப்புச் சுதந்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது தவறானது என்றும், திரையுலகினர் மீது சாதிச் முத்திரை குத்துவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் ஒருசில இயக்குனர்கள் கமல்ஹாசனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.

தற்போது இத்திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்புத் தொடங்கியுள்ள நிலையில், தலைப்பு தொடர்பான சர்ச்சைகளுக்குக் கமல்ஹாசன் அல்லது தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.