Posted in

ரஷ்ய வான் பாதுகாப்புப் படையின் தவறால் 3 சொந்த ராணுவ விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா?

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு அருகே உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலை முறியடிக்க முயன்றபோது, ரஷ்யப் படைகள் தங்களது சொந்த 3 ராணுவ விமானங்களைத் தவறுதலாகச் சுட்டு வீழ்த்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் உஸ்ட்-லுகா (Ust-Luga) துறைமுகப் பகுதியை நோக்கி உக்ரைன் டிரோன்கள் ஏவப்பட்டபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு போர் விமானம் ஆகியவை சுட்டு வீழ்த்தப்பட்டு, அவற்றில் பயணித்த 7 விமானப் படை வீரர்கள் உயிரிழந்ததாக ரஷ்ய ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் டிரோன்களைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கா-52 (Ka-52) மற்றும் எம்.ஐ-8 (Mi-8) ஆகிய இரண்டு ஹெலிகாப்டர்களும், ஒரு மிக்-31 (MiG-31) போர் விமானமும் ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பால் தவறுதலாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், சுட்டு வீழ்த்தப்பட்டவை மூன்று ஹெலிகாப்டர்களா அல்லது இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு போர் விமானமா என்பதில் மாறுபட்ட தகவல்கள் நிலவுகின்றன. இதற்கிடையே, பால்டிக் கடல் பகுதியில் உள்ள ரஷ்யாவின் மிகப்பெரிய எரிசக்தி ஏற்றுமதி முனையமான உஸ்ட்-லுகா துறைமுகத்தில் டிரோன் தாக்குதலால் தீ விபத்து ஏற்பட்டு 3 ஊழியர்கள் காயமடைந்ததாக லெனின்கிராட் பிராந்திய ஆளுநர் அலெக்சாண்டர் ட்ரோஸ்டென்கோ தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் ரஷ்ய வான்படைக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக ரஷ்ய ஆதரவு ராணுவ வலைப்பதிவாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். “செயின்ட் பீட்டர்ஸ்பர்க் வான்பரப்பை டிரோன் தாக்குதலில் இருந்து பாதுகாத்ததற்கு நாம் மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியுள்ளது” என்று ‘ஃபைட்டர்பாம்பர்’ (Fighterbomber) என்ற ரஷ்ய ராணுவ டெலிகிராம் சேனல் குறிப்பிட்டுள்ளது. அதேபோல், மூன்று அனுபவம் வாய்ந்த விமானக் குழுக்களைச் சேர்ந்த ஏழு வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ‘வோய்வோடா வெஷ்சாயெட்’ (Voevoda Veshchaet) என்ற மற்றொரு சேனல் பதிவிட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, இந்த விமான இழப்புகள் குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. அப்பகுதியில் 150 உக்ரைன் டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக மட்டுமே உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தவறுதலாகச் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் குறித்து ரஷ்ய ராணுவம் அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.