Posted in

ஈரானுக்கு எதிராக டிரம்ப் தொடங்கிய ‘ஆபரேஷன் அயர்ன் கேட்’: நிலவழிப் போக்குவரத்தையும் முடக்கும் அமெரிக்கா!

ஈரான் நாட்டின் ஆயுதக் கடத்தல் மற்றும் நிதி வலைப்பின்னல்களைத் தடுத்து நிறுத்த அமெரிக்கா புதிய தரைவழித் தடைகளை அறிவித்துள்ளது. அமெரிக்க மத்திய கட்டளைக் குழுவின் (CENTCOM) கீழ் செயல்படும் இந்த புதிய ‘அயன் கேட்’ (Iron Gate) பணிக்குழு, ஈரான் தரை மற்றும் காஸ்பியன் கடல் வழிகளை முடக்கச் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமலில் உள்ள கடற்படை முற்றுகையை மேலும் பலப்படுத்தும் வகையில் இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புளோரிடா மாநிலம் டம்பா நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த பணிக்குழுவில் சுமார் 20 இராணுவ மற்றும் குடிமைப் பணியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். தடை செய்யப்பட்ட பொருட்கள், மேம்பட்ட ஆயுத அமைப்புகள் மற்றும் இரட்டைப் பயன்பாட்டு தொழில்நுட்பங்கள் ஈரான் எல்லைக்குள் நுழைவதை இது தடுத்து நிறுத்தும் என்று சென்ட்காம் குறிப்பிட்டுள்ளது. மேலும், ஈரான் நாட்டின் நிதி வலைப்பின்னல்களைக் குறிவைத்து அமெரிக்க அரசு முகாமைகளுடன் இணைந்து இந்த அமைப்பு ஒருங்கிணைந்து செயல்படும்.

ஈரான் மீதான இந்த அழுத்தங்கள் வெறும் வெற்று வார்த்தை விளையாட்டு மட்டுமே என்றும், நாட்டின் பொருளாதாரத்தை இதனால் வீழ்த்த முடியாது என்றும் ஈரானிய புரட்சிகர காவல்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், வளைகுடா நாடுகளுடன் நடத்திய ஆலோசனைகளுக்குப் பிறகு கருத்துத் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் அணு ஆயுதம் பெறுவதை அனுமதிக்க முடியாது என்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.

தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவின் இந்த பொருளாதார மற்றும் தரைவழித் தடைகள் தொடர்ந்து கடுமையாக்கப்பட்டு வருகின்றன. ஹோர்முஸ் ஜலசந்தி மற்றும் ஈரானிய துறைமுகங்கள் மீதான கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட மாட்டாது என்று அமெரிக்கத் தரப்பு திட்டவட்டமாகக் கூறியுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார மோதல் தொடரும் சூழல் நிலவுகிறது.