தமிழக காவல்துறையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், அடுத்த 6 மாதங்களுக்குள் 10,000 புதிய காவலர்களை நியமிக்க வேண்டும் என முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்த மூன்றாவது உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தின் போது அவர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். காவல்துறையில் நிலவும் பணியிடப் பற்றாக்குறையைப் போக்கி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்தத் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் எம். சாய் குமார், உள்துறைச் செயலாளர் ஏ. கார்த்திக், காவல்துறை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் மற்றும் சிறத்துறை டிஜிபி கே. சங்கர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது மாநிலத்தில் பதிவான பல்வேறு கொலை வழக்குகள், குற்றச் சம்பவங்களின் பின்னணி மற்றும் காவல்துறை தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் முதல்-அமைச்சரிடம் விரிவாக விளக்கினர். மேலும், மாநிலத்தில் பதிவான போக்சோ வழக்குகள் மற்றும் குற்றவாளிகளைக் கைது செய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஆர். நிர்மல்குமார், நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்ந்த விவகாரங்களை முதலமைச்சர் நேரடியாகக் கண்காணித்து வருவதாகத் தெரிவித்தார். மேலும், குற்றங்களைத் தடுக்கும் பொருட்டு ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய காவலர்களைத் தேர்வு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆள்சேர்ப்புப் பணிகள் முழுமை அடைவதன் மூலம் காவல் துறையின் பணிச்சுமை குறைவதுடன், சட்டம்-ஒழுங்குப் பராமரிப்புப் பணிகள் மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.