அயர்லாந்து தலைநகர் டப்ளினில் நவம்பர் 13-ஆம் தேதி நடைபெற்ற ஐரோப்பியத் தலைவர்களின் உச்சிமாநாட்டில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் ஐஸ்லாந்து பிரதமர் கிறிஸ்ட்ரூன் ஃப்ரோஸ்டாடோட்டிர் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்தப் புகைப்படத்தில், புன்னகையுடன் தன்னை நோக்கி அரவணைக்க முன்வந்த அதிபர் மேக்ரானிடம் இருந்து ஐஸ்லாந்து பிரதமர் சற்றுப் பின்வாங்குவது போன்ற காட்சி பதிவாகியுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது, ஐஸ்லாந்து பிரதமர் கிறிஸ்ட்ரூன் ஃப்ரோஸ்டாடோட்டிர் தனது ஒரு கையை மேக்ரானின் தோளில் வைத்தபடி பின்னோக்கிச் சாய்ந்து, அருகிலிருந்த புகைப்படக் கலைஞர்களை ஓரக்கண்ணால் பார்ப்பது போல் தெரிகிறது. ஆனால், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் எவ்விதத் தயக்கமும் இன்றித் தொடர்ந்து புன்னகைத்தபடியே அவரை வரவேற்றுள்ளார்.
இரு தலைவர்களின் மாறுபட்ட உடல்மொழியைக் காட்டும் இந்தப் புகைப்படம் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் இது குறித்து பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். ஏற்கனவே இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியுடனான மேக்ரானின் சந்திப்புகளும் இதேபோல் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது இந்தச் சம்பவமும் கவனம் பெற்றுள்ளது.
ஐஸ்லாந்து பிரதமர் ஏன் இவ்வாறு பின்வாங்கினார் என்பதற்கான சரியான காரணம் அந்தப் புகைப்படத்தின் மூலம் உறுதியாகத் தெரியவில்லை. எனினும், டப்ளினில் நடைபெற்ற ஐரோப்பியத் தலைவர்களின் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தைத் தாண்டி, இரு தலைவர்களின் இந்தச் சந்திப்பு குறித்த காட்சிகளே தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.