Posted in

கனிமங்களைக் கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடை ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் இருந்து கருங்கல் மற்றும் ஜல்லிக்கற்கள் உள்ளிட்ட கனிமங்களை வெளிமாநிலங்களுக்குக் கொண்டு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கட்டுமானப் பொருட்களை வெளிமாநிலங்களுக்கு எடுத்துச் செல்லத் தடை விதித்துத் தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணையில் நீதிமன்றம் இன்று இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

தமிழகத்தில் நடைபெறும் உள்கட்டமைப்பு மற்றும் நகரமயமாக்கல் பணிகளுக்கான கட்டுமானப் பொருட்களின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யவும், செயற்கை விலையேற்றத்தைத் தடுக்கவும் கடந்த ஜூலை 9-ஆம் தேதி கனிமப் போக்குவரத்து விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் தவிர பிற மாநிலங்களுக்குக் கருங்கல் மற்றும் ஜல்லிக்கற்களைக் கொண்டு செல்ல ஜூலை 27-ஆம் தேதி முதல் மூன்று மாதங்களுக்குத் தடை விதிக்கப்பட்டு, பின்னர் அந்தத் தடை மேலும் நீட்டிக்கப்பட்டது.

இந்தத் தடையை நீக்க வேண்டும் எனத் தமிழக முதலமைச்சர் விஜய்க்கு கேரள முதலமைச்சர் சதீஷன் கடிதம் எழுதியிருந்த நிலையில், தடையை எதிர்த்து கனிமவள குத்தகைதாரர்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கனிமப் போக்குவரத்திற்குத் தடை விதிக்க வகை செய்யும் தமிழக அரசின் திருத்த விதிகள் அரசியல் சாசனத்திற்கு எதிரானவை என்று கூறித் தடையை நீக்கி உத்தரவிட்டனர்.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் அண்டை மாநிலங்களான கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு மீண்டும் கட்டுமானப் பொருட்கள் மற்றும் கனிமங்களைக் கொண்டு செல்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து கனிமப் போக்குவரத்து நடைமுறைகள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் சூழல் உருவாகியுள்ளது.