Posted in

எப்ஸ்டீன் உடற்கூராய்வு ஆவணங்கள் கொலையை சுட்டிக்காட்டுவதாக தடயவியல் நிபுணர் தகவல்

அமெரிக்காவின் நியூயார்க் சிறைச்சாலையில் 2019 ஆகஸ்ட் 10-ஆம் தேதி உயிரிழந்த ஜெஃப்ரி எப்ஸ்டீனின் உடற்கூராய்வு கோப்புகள் மற்றும் புகைப்படங்களை ஆய்வு செய்ததில், அவர் கொல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகத் தடயவியல் மருத்துவப் பேராசிரியர் மைக்கேல் ஃப்ரீமேன் தெரிவித்துள்ளார். லண்டனில் திங்கட்கிழமை (நவம்பர் 16) தனது ஆய்வு முடிவுகளை வெளியிட்ட அவர், எப்ஸ்டீனின் சகோதரர் மார்க் வழங்கிய மருத்துவப் பரிசோதனை ஆவணங்களை ஓராண்டாக ஆராய்ந்ததன் அடிப்படையில் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.

உடற்கூராய்வு புகைப்படங்களை ஆய்வு செய்தபோது எப்ஸ்டீனின் கழுத்தில் காணப்பட்ட தடங்கள் வழக்கமான தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்ளும் காயங்களைப் போல் இல்லை என ஃப்ரீமேன் குறிப்பிட்டுள்ளார். மேலும், கழுத்துத் தடத்திற்கு மேலே காணப்பட்ட நகக்கீறல்கள் மற்றும் இடது தோள்பட்டை, முதுகில் இருந்த காயங்களைப் பார்க்கும்போது, பின்புறமாக இருந்து துணியால் கழுத்து நெரிக்கப்பட்டிருக்கலாம் என்று அவர் பிபிசி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

எனினும், 2019-ஆம் ஆண்டு எப்ஸ்டீன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக அறிவித்த நியூயார்க் நகர தலைமை மருத்துவப் பரிசோதகர் அலுவலகம், தங்களது முந்தைய முடிவில் உறுதியாக இருப்பதாக மீண்டும் தெரிவித்துள்ளது. அதேபோல், முன்னதாக அமெரிக்க நீதித்துறை நடத்திய விசாரணையிலும் எப்ஸ்டீன் மரணம் தற்கொலைதான் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தனது இந்த ஆய்வுக் கட்டுரை இதுவரை சக நிபுணர்களால் மதிப்பாய்வு செய்யப்படவில்லை (peer-reviewed) என்றும், இதற்காகத் தாம் எந்த ஊதியமும் பெறவில்லை என்றும் பேராசிரியர் ஃப்ரீமேன் விளக்கமளித்துள்ளார். எப்ஸ்டீனை யார் கொன்றிருக்கக்கூடும் என்பது தனது ஆய்வின் நோக்கமல்ல எனக் கூறியுள்ள அவர், தனது ஆய்வு முடிவுகளை அறிவியல் ஆய்விதழில் வெளியிடும் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.