சீனாவின் அரசுக்குச் சொந்தமான விமானத் தயாரிப்பு நிறுவனமான காமாக் (COMAC), உள்நாட்டிலேயே உருவாக்கிய 19 இருக்கைகள் கொண்ட CE-25A மின்சார பயணிகள் விமானத்தின் முதல் மனிதர்களுடன் கூடிய சோதனைப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள பின்சோவ் (Binzhou) நகரில் கடந்த சனிக்கிழமை (நவம்பர் 14) நடைபெற்ற இந்தச் சோதனையில், இரண்டு விமானிகள் மற்றும் ஒரு சோதனைப் பொறியாளர் விமானத்தில் பயணித்தனர்.
மொத்தம் 57 நிமிடங்கள் 46 வினாடிகள் நடைபெற்ற இந்தச் சோதனை நடவடிக்கையின் போது, விமானம் 16 நிமிடங்கள் 38 வினாடிகள் வானில் பறந்து 60.4 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்துள்ளது. சுமார் 10 டன் எடை கொண்ட இந்த விமானத்தில் 10 மின்சார டக்டட் ஃபேன்கள் (ducted fans) பொருத்தப்பட்டுள்ளன. மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில், 2,400 மீட்டர் உயரத்தில் பயணிக்கும் திறன் கொண்ட இந்த விமானம், ஒருமுறை சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
காமாக் நிறுவனத்துடன் இணைந்து முன்னணி பேட்டரி தயாரிப்பு நிறுவனமான சி.ஏ.டி.எல் (CATL) மற்றும் ஷாங்காய் ஜியாவோ டோங் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து இந்த விமானத்தை உருவாக்கியுள்ளன. முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஆளில்லா சோதனைப் பயணத்தைத் தொடங்கிய இந்த விமானம், இதுவரை 19 ஆளில்லா சோதனைகளை முடித்த நிலையில், தற்போது விமானிகளுடன் பறந்துள்ளதாகவும், அனைத்து அமைப்புகளும் எதிர்பார்த்தபடி இயங்கியதாகவும் காமாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறுகிய தூர நகரங்களுக்கு இடையிலான பயணங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த விமானத்திற்கு வணிக ரீதியான சான்றிதழ் வழங்குவதற்கான விண்ணப்பத்தைச் சீன சிவில் விமானப் போக்குவரத்து நிர்வாகம் (CAAC) ஏற்றுக்கொண்டு ஆய்வுகளைத் தொடங்கியுள்ளது. எனினும், பயணிகள் சேவைக்கு இந்த விமானம் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்ற அதிகாரப்பூர்வத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பதுடன், மேலதிக பாதுகாப்புச் சோதனைகள் தொடர்ந்து நடைபெற உள்ளன.