Posted in

வாயேஜர் 1 புதிய மைல்கல்: மோர்ஸ் குறியீட்டில் ‘VGR’ ஒளியை வானில் காட்ட நாசா அழைப்பு

பூமியிலிருந்து ஒரு ஒளி-நாள் (One Light-Day) தொலைவை எட்டும் மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் விண்கலம் என்ற வரலாற்று மைல்கல்லை நாசாவின் ‘வாயேஜர் 1’ (Voyager 1) விண்கலம் புதன்கிழமை (நவம்பர் 18) எட்ட உள்ளது. இந்தச் சாதனையைக் கொண்டாடும் வகையில், நவம்பர் 17-ஆம் தேதி இரவு சூரிய மறைவுக்குப் பிறகு பொதுமக்கள் அனைவரும் வானத்தை நோக்கி மோர்ஸ் குறியீட்டில் (Morse code) ஒளியைக் காட்டுமாறு நாசா அழைப்பு விடுத்துள்ளது.

ஒளி 24 மணி நேரத்தில் பயணிக்கும் தூரமான சுமார் 25.90 பில்லியன் கிலோமீட்டர் (16.09 பில்லியன் மைல்கள்) தொலைவை வாயேஜர் 1 விண்கலம் கடக்க உள்ளது. 1977-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட இந்த விண்கலம், சுமார் 49 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து இந்தத் தொலைவை எட்டுவதால், இனி பூமியிலிருந்து அனுப்பப்படும் தகவல்கள் விண்கலத்தைச் சென்றடைய 24 மணி நேரமும், பதில் திரும்ப வர 24 மணி நேரமும் ஆகும்.

‘ஷைன் பிரைட் ஃபார் வாயேஜர்ஸ் லைட்-டே’ (Shine Bright for Voyager’s Light-Day) என்ற பெயரில் நடத்தப்படும் இந்த நிகழ்வில், மக்கள் டார்ச் லைட் அல்லது செல்போன் விளக்கைப் பயன்படுத்தி வாயேஜர் திட்டத்தின் அழைப்புக் குறியீடான ‘VGR’ என்பதை மோர்ஸ் குறியீட்டில் ஒளிரச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதன்படி ‘V’ என்பதற்கு மூன்று குறுகிய ஒளிகளும் ஒரு நீண்ட ஒளியும், ‘G’ என்பதற்கு இரண்டு நீண்ட ஒளிகளும் ஒரு குறுகிய ஒளியும், ‘R’ என்பதற்கு ஒரு குறுகிய, ஒரு நீண்ட மற்றும் ஒரு குறுகிய ஒளியும் காட்ட வேண்டும் என நாசா விளக்கியுள்ளது.

மக்கள் எளிதாகப் பங்கேற்பதற்காக நாசாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தானியங்கி ஒளி காட்டும் வசதியும் (Automated flasher) ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், பங்கேற்பாளர்கள் தங்கள் வீடியோக்களை @NASA பக்கத்தைக் குறிப்பிட்டுப் பகிருமாறும் ஊக்குவிக்கப்பட்டுள்ளனர். இந்த வரலாற்றுப் பயணம் குறித்து நவம்பர் 19-ஆம் தேதி நாசாவின் ஜெட் புரபல்ஷன் ஆய்வகத்தில் (JPL) சிறப்புக் கலந்துரையாடலும் நடைபெற உள்ளது.