ஹார்முஸ் ஜலசந்தியில் அமைந்துள்ள ஈரானின் கெஷ்ம் (Qeshm) தீவில் உள்ள இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) ஏவுகணை ஏவுதளத்தைக் குறிவைத்து அமெரிக்கப் போர் விமானங்கள் துல்லியமான தாக்குதலை நடத்தியுள்ளன. அமெரிக்கப் படைகள் மற்றும் சொத்துக்களைக் குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகவும், தற்காப்பு நடவடிக்கையாகவும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் ஏ.எஃப்.பி (AFP) செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்தத் தாக்குதலால் கெஷ்ம் தீவில் பெரிய அளவிலான சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான இர்னா (IRNA) தெரிவித்துள்ளது. முன்னதாக, பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ரேடார் அமைப்பைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் கூறியிருந்த நிலையில், வளைகுடாப் பிராந்தியத்தில் சர்வதேச கப்பல் போக்குவரத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது.
இதற்கிடையில், புதன்கிழமை (நவம்பர் 18) அதிகாலை ஈரானிலிருந்து ஏவப்பட்ட பல வான்வழித் தாக்குதல்களைத் தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்ததாக பஹ்ரைன் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது. அதேபோல், குவைத் ராணுவமும் எதிரி நாட்டு ட்ரோன் அச்சுறுத்தல்களைத் தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் எதிர்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளதுடன், பொதுமக்கள் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
பஹ்ரைன் மீதான ஈரானின் தொடர் தாக்குதல்களுக்கு வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) பொதுச்செயலாளர் ஜாசிம் முகமது அல்புதைவி கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, இதனைத் தடுக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியை மையமாகக் கொண்டு அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளதால், வளைகுடா நாடுகளில் உச்சக்கட்டப் பாதுகாப்பு எச்சரிக்கை நீடித்து வருகிறது.