கொரோனா வைரஸ் இயற்கையாகவே உருவானது என்றும், சீன ஆய்வகத்திலிருந்து கசியவில்லை என்றும் 2020-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட முக்கிய அறிவியல் கட்டுரை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் (NIH) இயக்குநர் ஜெய் பட்டாச்சார்யா கோரிக்கை விடுத்துள்ளார். நவம்பர் 18-ஆம் தேதி ‘நேச்சர் மெடிசின்’ (Nature Medicine) ஆய்விதழுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், அந்த ஆய்வின் உருவாக்கத்தில் மறைமுகப் பங்களிப்புகள் இருந்ததா என்பதை ஆராயுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
2020 மார்ச் மாதம் ‘தி ப்ராக்ஸிமல் ஆரிஜின் ஆஃப் சார்ஸ்-கோவ்-2’ (The Proximal Origin of SARS-CoV-2) என்ற தலைப்பில் கிறிஸ்டியன் ஆண்டர்சன் உள்ளிட்ட ஐந்து விஞ்ஞானிகள் பெயரில் இந்தக் கட்டுரை வெளியானது. ஆனால், முன்னாள் என்.ஐ.ஹெச் இயக்குநர் பிரான்சிஸ் காலின்ஸ், முன்னாள் என்.ஐ.ஏ.ஐ.டி இயக்குநர் அந்தோணி ஃபௌசி மற்றும் வெல்கம் டிரஸ்ட் முன்னாள் தலைவர் ஜெரமி ஃபரார் ஆகியோர் தங்களது பெயர்களை வெளிப்படுத்தாமல் இந்த ஆய்வை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2020 பிப்ரவரி 1-ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு வரைவு அறிக்கைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும், இது அறிவியல் வெளியீட்டு விதிகளுக்கு முரணானது என்றும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக அமெரிக்க நாடாளுமன்றக் குழுவிடம் சாட்சியமளித்த ஆய்வாளர் கிறிஸ்டியன் ஆண்டர்சன் மற்றும் அந்தோணி ஃபௌசி ஆகியோர், ஆய்வகக் கசிவு கோட்பாட்டை மறுப்பதற்காகத் தாங்கள் அழுத்தம் கொடுக்கவில்லை என்றும், ஆரம்பக்கட்ட வரைவுகளைப் பகிர்ந்து கொண்டது மட்டுமே நிகழ்ந்ததாகவும் மறுப்புத் தெரிவித்திருந்தனர். இருப்பினும், வெளியிடப்படாத பங்களிப்புகள் குறித்துச் சுதந்திரமான விசாரணை நடத்தி, அந்த ஆய்வுக் கட்டுரையைத் திருத்த வேண்டுமா அல்லது திரும்பப் பெற வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டும் என என்.ஐ.ஹெச் இயக்குநர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் விசாரணைத் திட்டம் மற்றும் கால அட்டவணையைச் சமர்ப்பிக்க நேச்சர் மெடிசின் இதழுக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது வரை அந்த ஆய்வுக் கட்டுரை ஆய்விதழில் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள நிலையில், வரும் டிசம்பர் 18-ஆம் தேதிக்குள் நேச்சர் மெடிசின் நிர்வாகம் எடுக்கப்போகும் அடுத்தகட்ட நடவடிக்கை அறிவியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.