இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும் நவம்பர் 21-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த வரவேற்பு விழாவிற்காக நகைப்பெட்டி போன்ற அழகிய மரப்பெட்டி வடிவில் உருவாக்கப்பட்டுள்ள அழைப்பிதழின் பின்னணி குறித்து, அதனை வடிவமைத்த ‘பிங்க் விசில்மேன்’ நிறுவனர் ரஞ்சனி ஐயங்கார் விளக்கியுள்ளார்.
அழைப்பிதழைப் பார்த்த பிறகு யாரும் தூக்கிப் போடாமல், பத்திரமாகப் பாதுகாத்து வைக்கும் வகையில் உருவாக்க வேண்டும் என அனிருத் மற்றும் காவ்யா மாறன் கேட்டுக்கொண்டதாக ரஞ்சனி ஐயங்கார் எகனாமிக் டைம்ஸ் மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். சுமார் மூன்றரை மாத உழைப்பில் கையால் வண்ணம் தீட்டப்பட்ட 10 முதல் 12 செதுக்கப்பட்ட வேலைப்பாடுகளுடன் வெள்ளை மற்றும் வெளிர் நீல நிறக் கலவையில் இந்த அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது.
மரத்தால் ஆன இந்த அழைப்பிதழ் பெட்டிக்குள் அழைப்பிதழுடன் ஜோர்டான் பாதாம் பாக்கெட்டுகளும் வைக்கப்பட்டு, பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதலமைச்சர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்களுக்கு நேரில் வழங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே ஆனந்த் அம்பானி திருமணத்தின்போது மணமகள் ராதிகா மெர்ச்சன்ட் தரப்பு அழைப்பிதழ்களை வடிவமைத்த ரஞ்சனி ஐயங்கார், தங்களது முயற்சிக்கு அனைவரிடமும் பாராட்டு கிடைத்துள்ளதால் அனிருத் மற்றும் காவ்யா மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கிரீஸ் நாட்டில் அனிருத் மற்றும் காவ்யா மாறனின் திருமணம் நடைபெற்றுள்ள நிலையில், தற்போது சென்னையில் நடைபெற உள்ள வரவேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அரசியல், சினிமா மற்றும் கிரிக்கெட் துறைகளைச் சேர்ந்த பல முக்கியப் பிரபலங்கள் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.