Posted in

திருவாரூர் தனியார் பள்ளியில் 3 வயது சிறுவன் கைகள் கட்டப்பட்டுத் தாக்குதல்: உதவியாளர் கைது

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 3 வயது ப்ரீகேஜி மாணவர் கைகள் கட்டப்பட்டுத் தாக்கப்பட்ட சம்பவத்தில், பள்ளியின் பெண் உதவியாளர் செல்வி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருத்துறைப்பூண்டி கச்சேரி சாலை பகுதியைச் சேர்ந்த கோபிநாத் என்பவரது மகன் ஷர்வின் பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது உடலில் காயங்கள் இருந்ததை அடுத்து இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

காயங்கள் குறித்துப் பெற்றோர் விசாரித்தபோது, பள்ளியில் ஆசிரியை பாக்கியலட்சுமி மற்றும் பெண் உதவியாளர் செல்வி ஆகியோர் தன்னைத் தாக்கியதாகச் சிறுவன் கூறியுள்ளான். இதனைத் தொடர்ந்து பள்ளிக்குச் சென்ற சிறுவனின் தந்தை கோபிநாத் வகுப்பறையிலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, குழந்தையின் இரு கைகளும் கயிற்றால் கட்டப்பட்டுத் தாக்கப்படும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

இது குறித்து கோபிநாத் அளித்த புகாரின் பேரில், திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் ஆசிரியை மற்றும் உதவியாளர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதனிடையே, சிறுவனைக் கட்டி வைத்துத் தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிப் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கடும் கண்டனத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய பள்ளி உதவியாளர் செல்வியைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள ஆசிரியை பாக்கியலட்சுமியைப் பிடிப்பதற்கான தேடுதல் பணிகளைக் காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.