முதலமைச்சர் விஜய் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், தமிழகத்தின் 59 நகரங்களில் 64 புதிய விளையாட்டு மைதானங்கள் அமைப்பதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நகர்ப்புறக் குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் மற்றும் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாக இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 16-வது மத்திய நிதிக் குழு மானிய நிதியின் கீழ் இந்த 64 விளையாட்டு உட்கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதில் மாநிலம் முழுவதும் உள்ள 8 மாநகராட்சிகள் மற்றும் 51 நகராட்சிகள் என மொத்தம் 59 உள்ளாட்சி அமைப்புகள் அடங்கும். ஒவ்வொரு சிப்பத்திற்கும் குறைந்தபட்சம் 4 லட்சம் ரூபாய் முதல் அதிகபட்சம் 32 லட்சம் ரூபாய் வரை மதிப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புறப் பகுதிகளில் விளையாடுவதற்குப் போதிய இடம் இல்லாத சூழலில், இந்தப் புதிய மைதானங்கள் குழந்தைகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும் எனப் பார்க்கப்படுகிறது. குடிநீர், சாலை மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளுடன் இப்போது விளையாட்டு வசதிகளும் மேம்படுத்தப்படுவது நகர்ப்புறப் பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. முன்னதாக இத்துறையின் கீழ் 11,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.
தகுதியுள்ள ஒப்பந்ததாரர்கள் நவம்பர் 23-ஆம் தேதி முதல் டிசம்பர் 9-ஆம் தேதி வரை tntenders.gov.in இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். டிசம்பர் 9-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் சமர்ப்பிக்கப்படும் ஒப்பந்தப்புள்ளிகள், அன்றைய தினமே பிற்பகல் 3.30 மணிக்குத் திறக்கப்பட உள்ளன.