கனடாவின் மிகவும் தேடப்படும் 25 குற்றவாளிகள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த ரவுடி கோல்டி பிராரை (என்கிற சதிந்தர்ஜீத் சிங்) முதலிடத்தில் சேர்த்துள்ள அந்நாட்டின் பொதுப் பாதுகாப்பு அமைப்பான ‘போலோ’ (BOLO Program), அவரைக் கைது செய்ய உதவும் தகவல்களை அளிப்போருக்கு 2,50,000 கனடிய டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.62 கோடி) வரை வெகுமதி அறிவித்துள்ளது. 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வின்னிபெக் நகரில் சுக்தூல் சிங் கில் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் வின்னிபெக் காவல்துறையால் அவர் தேடப்பட்டு வருகிறார்.
கடந்த 2023 செப்டம்பர் 20-ஆம் தேதி ஹேசல்டன் டிரைவ் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 39 வயதான சுக்தூல் சிங் கில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்குத் தொடர்பாகக் கடந்த 2026 பிப்ரவரி 23-ஆம் தேதி கோல்டி பிரார் மற்றும் கரண்பீர் சிங் ஆகியோர் மீது முதல்நிலை கொலை மற்றும் கொலை சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, நாடு தழுவிய கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. முன்னதாக கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி அமெரிக்காவின் எஃப்.பி.ஐ (FBI) அமைப்பும் தனது மிகவும் தேடப்படும் 10 குற்றவாளிகள் பட்டியலில் கோல்டி பிராரைச் சேர்த்து, 1 மில்லியன் அமெரிக்க டாலர் வெகுமதி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய வன்முறைச் செயல்களுக்கு எதிராகத் தங்கள் நகரங்களையும் நாட்டையும் தீவிரமாகப் பாதுகாப்போம் என்றும், இதனை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் வின்னிபெக் காவல்துறை துணைத் தலைவர் கேம் மேக்கிட் தெரிவித்துள்ளார். கோல்டி பிரார் ஆயுதங்களுடன் இருக்கும் அபாயகரமான நபர் என்பதால், பொதுமக்கள் அவரை நேரடியாக அணுக வேண்டாம் எனவும், தகவல் தெரிந்தால் உள்ளூர் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கனடா அல்லது அமெரிக்காவில் கோல்டி பிரார் கைது செய்யப்படுவதற்கு உதவும் நம்பகமான தகவல்களுக்கு இந்த வெகுமதி பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2027 நவம்பர் 2-ஆம் தேதி வரை இந்த வெகுமதி அறிவிப்பு அமலில் இருக்கும் நிலையில், அமெரிக்கா, கனடா மற்றும் இந்திய பாதுகாப்பு அமைப்புகள் இணைந்து அவரைத் தேடும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.