Posted in

குக் வித் கோமாளி புகழ் நடிகர் அஸ்வின் குமார் திருமணம் கோவையில் இன்று நடந்தது

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் அஸ்வின் குமார், புவனேஸ்வரி என்பவரை கோவையில் நவம்பர் 20-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்தத் திருமணத் தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

மணப்பெண் புவனேஸ்வரி, மறைந்த திரைப்பட இயக்குநர் ராஜசேகரின் பேத்தி ஆவார். இயக்குநர் ராஜசேகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் நடித்த பல்வேறு படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அஸ்வின் குமாரின் திருமணம் குறித்து முன்கூட்டியே பெரிதாகத் தகவல் வெளியாகாத நிலையில், நவம்பர் 19-ஆம் தேதி மாலை முதல் இந்தத் திருமணம் குறித்த செய்திகள் வெளிவரத் தொடங்கின.

தொடக்கத்தில் சின்னத்திரை மற்றும் படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அஸ்வின் குமார், குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்குப் பிறகு ரசிகர்களிடையே கவனம் பெற்றார். அதனைத் தொடர்ந்து என்ன சொல்லப் போகிறாய், செம்பி மற்றும் ஹாட்ஸ்பாட் 2 மச் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.

திருமணம் நடைபெற்றுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் அஸ்வின் குமார் மற்றும் புவனேஸ்வரிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இதுவரை அஸ்வின் குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணம் தொடர்பான எந்தப் பதிவையும் பகிரவில்லை எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.