2026 ஆம் ஆண்டின் சிறந்த சொல்லுக்கான (Word of the Year) இறுதிப் பட்டியலில் நான்கு சொற்களை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பதிப்பகம் (Oxford University Press) வெளியிட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு, மாறிவரும் வாசிப்புப் பழக்கம் மற்றும் டிஜிட்டல் பொழுதுபோக்கு ஆகியவற்றை மையமாகக் கொண்ட இந்தப் பட்டியலில் ‘ஸ்லோபகண்டா’ (slopaganda), ‘டூமரிசம்’ (doomerism), ‘போஸ்ட்-லிட்ரேட்’ (post-literate) மற்றும் ‘மைக்ரோடிராமா’ (microdrama) ஆகிய சொற்கள் இடம்பெற்றுள்ளன.
செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் தரமற்ற பிரச்சாரங்களைக் குறிக்கும் ‘ஸ்லோபகண்டா’ சொல்லின் பயன்பாடு கடந்த ஆண்டில் 1,300 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளதாக ஆக்ஸ்போர்டு தெரிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவு குறித்த தீவிர அவநம்பிக்கையைக் குறிக்கும் ‘டூமரிசம்’ சொல்லின் பயன்பாடும் இந்த ஆண்டு கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது.
வாசிப்புப் பழக்கம் குறைந்து குறுகிய வீடியோக்கள் மற்றும் ஏஐ உள்ளடக்கங்கள் அதிகரிக்கும் நிலையைக் குறிக்கும் ‘போஸ்ட்-லிட்ரேட்’ சொல்லும், ஸ்மார்ட்போன்களில் பார்க்கும் மிகக் குறுகிய தொடர்களைக் குறிக்கும் ‘மைக்ரோடிராமா’ சொல்லும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த 12 மாதங்களில் மொழிப் பயன்பாட்டுத் தரவுகள், பொதுமக்கள் பரிந்துரைகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளின் அடிப்படையில் இந்தச் சொற்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த நான்கு சொற்களுக்கான பொதுமக்கள் வாக்கெடுப்பு நவம்பர் 24 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கெடுப்பு முடிந்த பிறகு, 2026 ஆம் ஆண்டின் ஆக்ஸ்போர்டு சிறந்த சொல் எது என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.