Posted in

திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில் பாறையில் தற்கொலை மிரட்டல்: 4 மணி நேர போராட்டத்திற்குப் பின் மீட்பு

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில் பாறையில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை, காவல்துறையினரும் தீயணைப்புப் படை வீரர்களும் சுமார் 4 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு பாதுகாப்பாக மீட்டுள்ளனர். நவம்பர் 19-ஆம் தேதி இரவு கோவில் நடை சாத்தப்பட்ட பின்னர் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

மலைக்கோட்டை கோவிலில் இரவு 8 மணிக்குப் பிறகு பக்தர்கள் கீழே இறங்கியதும், ஊழியர்கள் மலை உச்சியில் சோதனை நடத்தியபோது குடைவரைக் கோவில் அருகே உள்ள பாறையில் ஒருவர் அமர்ந்திருப்பதைக் கண்டனர். கீழே இறங்கி வருமாறு அழைத்தபோது, சிலர் தன்னைக் கொல்ல வருவதாகக் கூறி கீழே குதித்துத் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

தகவலறிந்து விரைந்து வந்த கோட்டை காவல்துறையினரும் தீயணைப்பு வீரர்களும் கயிறு மூலம் அவரை மீட்க முயன்றபோதும், அவர் ஒத்துழைக்காமல் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்தார். பின்னர் இரவு 12.45 மணியளவில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அவருக்குக் குடிப்பதற்குத் தண்ணீர் கொடுத்துப் பேச்சுக்கொடுத்தபடியே, லாவகமாகக் கை கால்களைக் கட்டிப் பாதுகாப்பாக மீட்டனர்.

விசாரணையில் அவர் கோவை சூலூரைச் சேர்ந்த செந்தில் என்பதும், தனியார் செல்போன் நிறுவன ஊழியரான அவர் விவாகரத்து மற்றும் மன அழுத்தம் காரணமாக சீரடி செல்வதாகத் தாயாரிடம் கூறிவிட்டுத் திருச்சி வந்ததும் தெரியவந்துள்ளது. மீட்கப்பட்ட செந்திலிடம் கோட்டை காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.