Posted in

ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய ஒப்பந்தம்: பிரிட்டன் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமுக்கு எதிர்ப்பு

பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நவம்பர் 20-ஆம் தேதி நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய – பிரிட்டன் உச்சிமாநாட்டில், பிரிட்டன் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) ஐரோப்பிய ஒன்றியத்துடன் மூன்று முக்கிய ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளார். 2016 பிரெக்ஸிட் (Brexit) வாக்கெடுப்பிற்குப் பிறகு ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்புகளைச் சரிசெய்யும் நோக்கில், உணவு ஏற்றுமதி விதிகளை எளிதாக்குவது, கார்பன் வர்த்தகத் திட்டங்களை இணைப்பது மற்றும் இளைஞர்களுக்கான விசா திட்டம் ஆகியவற்றில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், இரு தரப்பிலிருந்தும் 30 வயதுக்குட்பட்ட தலா 1 லட்சம் இளைஞர்கள் வேலை, கல்வி அல்லது சுற்றுலாவிற்காக மூன்று ஆண்டுகள் வரை வசிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரிட்டன் பல்கலைக்கழகங்களில் பயிலும் ஐரோப்பிய ஒன்றிய மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தைக் குறைப்பது குறித்து அடுத்த ஆறு மாதங்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதுவரை ஒப்பந்த அமலாக்கத்தை நிறுத்தி வைப்பதாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தெரிவித்துள்ளன.
பிரிட்டன் விவசாயிகளைப் பாதிக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றிய விதிகளை எந்த வாக்குரிமையும் இன்றி பிரிட்டன் ஏற்றுக்கொள்வதாக ரிஃபார்ம் யுகே (Reform UK) தலைவர் நைஜல் ஃபராஜ் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியினர் விமர்சித்துள்ளனர். பிரெக்ஸிட் வாக்கெடுப்பிற்கு எதிராகப் பிரதமர் செயல்படுவதாகவும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் மீண்டும் இணைவதற்கான கதவுகளை அவர் திறப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
மறுபுறம், இந்த ஒப்பந்தங்கள் பிரிட்டன் பொருளாதாரத்திற்குப் பல பில்லியன் டாலர் அளவிற்கு ஊக்கமளிக்கும் என்றும், உணவுப் பொருட்களின் விலையைக் குறைக்க உதவும் என்றும் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் விளக்கமளித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்துடனான நீண்டகால உறவு குறித்த விருப்பங்களை அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் முன்வைக்க உள்ளதாகவும், இதற்கான சட்ட நடவடிக்கைகள் அடுத்த வாரம் தொடங்கப்படும் என்றும் பிரிட்டன் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.