கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தவெக உறுப்பினர் வி.எஸ். பாபு நவம்பர் 19-ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து, அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் குறித்த விவாதங்கள் தொடங்கியுள்ளன. இச்சூழலில், இடைத்தேர்தல் தொடர்பாகக் கட்சித் தலைமை முடிவெடுக்கும் வரை தொண்டர்கள் அமைதி காக்குமாறு திமுக இளைஞரணி நிர்வாகி சத்யன் டேனியல் அறிவுறுத்தியுள்ளார்.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற வி.எஸ். பாபு (75), உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பால் உயிரிழந்தார். கடந்த தேர்தலில் தவெக 82,997 வாக்குகளும் (45.09 சதவீதம்), திமுக 74,202 வாக்குகளும் (40.32 சதவீதம்) பெற்றிருந்தன; அதிமுக வேட்பாளர் 18,430 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 5,046 வாக்குகளையும் பெற்றிருந்தன.
வி.எஸ். பாபுவின் மறைவிற்குப் பிறகு சமூக வலைதளங்களில் தவெக மற்றும் திமுக தொண்டர்களிடையே விவாதங்களும் விமர்சனங்களும் எழுந்தன. இதையடுத்து, “சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்” எனத் தெரிவித்த திமுக இளைஞரணி நிர்வாகி சத்யன் டேனியல், “இடைத்தேர்தல் குறித்து தலைமை முடிவு எடுக்கும் வரை உடன்பிறப்புகள் அமைதி காப்பது நல்லது” என்று எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தேர்தல் ஆணைய விதிகளின்படி, சட்டமன்ற உறுப்பினர் மறைந்தால் அடுத்த ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால் கொளத்தூர் இடைத்தேர்தலில் மு.க. ஸ்டாலின் மீண்டும் போட்டியிடுவாரா என அரசியல் வட்டாரங்களில் விவாதிக்கப்படுகிறது. ஏற்கெனவே திருச்சி கிழக்கு, பெருந்துறை, கரூர், விராலிமலை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், கொளத்தூரையும் சேர்த்து தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.