Posted in

திண்டிவனம் அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் மீது பஸ் மோதி 2 பேர் பலி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சபரிமலை ஐயப்ப பக்தர்கள் பயணம் செய்த வேன் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். இன்று (நவம்பர் 23) அதிகாலை தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நேரிட்டதில், வேனில் பயணம் செய்த 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்வதற்காக பக்தர்கள் குழுவினர் வேனில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த தனியார் பேருந்து எதிர்பாராதவிதமாக வேன் மீது மோதியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோதலின் வேகத்தில் வேன் சாலையில் கவிழ்ந்ததில், வாகனத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர். திருவள்ளூர் மாவட்டம் வருதாபுரத்தைச் சேர்ந்த பக்தர்கள் குழு இந்த வேனில் பயணித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்து குறித்துத் தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் நெடுஞ்சாலை ரோந்துப் போலீசார் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்த 13 பேரும் ஆம்புலன்ஸ்கள் மூலம் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தனியார் பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.