திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக இன்ஸ்டாகிராம் பெண் பிரபலம் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பிக்பாஸ் பிரபலம் முத்துக்குமரன் தலைமறைவாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்மன் வழங்க விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சென்றபோது அவரது வீடு பூட்டப்பட்டிருந்ததாகவும், செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் அந்தப் பெண் அளித்த புகார் மனு, மேல் விசாரணைக்காக விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப்பிரிவு 69-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கு முன்பே அந்தப் பெண் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுப் புகார் கூறியிருந்த நிலையில், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் எடிட் செய்யப்பட்ட வீடியோக்களை வெளியிட்டதாகக் கூறி முத்துக்குமரன் அளித்த எதிர் புகாரில் குற்றவியல் வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் இல்லை என போலீசார் தெரிவித்திருந்தனர்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற முத்துக்குமரன், மேடைப் பேச்சாளர் மற்றும் யூடியூபராகவும் அறியப்படுபவர் ஆவார். இந்த வழக்கில் புகார் அளித்த பெண்ணிடம் போலீசார் ஏற்கனவே வாக்குமூலம் பெற்றுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
முத்துக்குமரன் சம்மன் பெற்று விளக்கம் அளிக்க ஆஜராகிறாரா என்பதை ஓரிரு நாட்கள் பொறுத்திருந்து பார்க்கவும், அதன் பிறகும் அவர் வரவில்லை எனில் செல்போன் சிக்னலை வைத்துத் தனிப்படை அமைத்துத் தேடவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விசாரணைக்குப் பிறகு குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.