Posted in

மணலி சின்ன சேக்காட்டில் மழையின்போது அறுந்து விழுந்த உயர் மின் கம்பி

மணலி சின்ன சேக்காடு பகுதியில் உள்ள பார்த்த சாரதி தெருவில், இன்று (நவம்பர் 23) காலை மழை பெய்து கொண்டிருந்தபோது உயர் மின் அழுத்த மின் கம்பி அறுந்து கீழே விழுந்தது. மின் கம்பி விழுந்த இடத்தில் மழை நீர் தேங்கியிருந்ததால் அந்தப் பகுதியில் மின்சாரக் கசிவு ஏற்பட்டது.
இந்தப் பகுதியிலுள்ள குடியிருப்புகளுக்குச் சாத்தாங்காடு மின்வாரியப் பிரிவு அலுவலகத்தில் இருந்து மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. மழை நீரில் மின்சாரம் கசிந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றதாகவும், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்த கவுன்சிலர் கீர்த்தி உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, மின் கம்பி அருகே பொதுமக்கள் செல்லாதவாறு தடுத்துப் பாதுகாப்பு நடவடிக்கை எடுத்தார். மேலும், அவர் உடனடியாகச் சாத்தாங்காடு மின்வாரிய அலுவலகத்திற்குத் தகவல் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் மின்விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து அறுந்து விழுந்த மின் கம்பியைச் சரிசெய்த பிறகு, அப்பகுதியில் மின்விநியோகம் மீண்டும் சீரானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.