Posted in

சென்னை மெரினா லூப் சாலையில் கடைகளை அகற்ற 7 நாள் கெடு: வாரியம் நோட்டீஸ்

சென்னை மெரினா கடற்கரையின் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் உணவகங்களை 7 நாட்களுக்குள் காலி செய்ய தமிழ்நாடு நகர்ப்புற வாழிட மேம்பாட்டு வாரியம் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. பழைய பட்டினப்பாக்கம் திட்டப் பகுதியில் வாரியத்திற்குச் சொந்தமான நிலத்தில் அமைந்துள்ள அனைத்து உணவுக் கடைகள், சிறுகடைகள் மற்றும் பெட்டிக்கடைகளை அகற்ற இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எவ்வித தீயணைப்புப் பாதுகாப்பு அனுமதியோ அல்லது நகராட்சி அங்கீகாரமோ பெறாமல் பாதுகாப்பற்ற முறையில் இந்த உணவகங்கள் மற்றும் கடைகள் செயல்பட்டு வருவதாக வாரியத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இக்கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக மழைநீர் வடிகால்களிலும் திறந்தவெளிகளிலும் விடப்படுவதால் சுகாதாரக் கேடு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் சுகாதார ஆபத்துகளைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் உணவுகளுக்குப் பெயர்பெற்ற ‘அக்கா கடை’ உள்ளிட்ட பிரபலமான உணவுக் கடைகளும் இந்தப் பகுதியில் அமைந்துள்ளதால், கடைகள் அகற்றப்படும் அறிவிப்பு சென்னை வாசிகளிடையே கவனத்தைப் பெற்றுள்ளது.

கடைகளை நடத்தும் உரிமையாளர்கள் 7 நாட்களுக்குள் இடத்தைக் காலி செய்து வாரியப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கடைகளை அகற்றத் தவறினால், சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு நகர்ப்புற வாழிட மேம்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.