ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் முன்னாள் மெய்க்காப்பாளரும், அந்நாட்டின் முன்னாள் அவசரகாலத் துறை அமைச்சருமான யெவ்ஜெனி ஜினிச்சேவின் (Yevgeny Zinichev) 2021-ஆம் ஆண்டு மரணம், ரஷ்ய அரசின் ரகசியப் புள்ளிவிவர ஆவணங்களில் தற்கொலையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய அரசு புள்ளிவிவர நிறுவனமான ரோஸ்ஸ்டாட் (Rosstat) தரவுகளில் இருந்து ஹேக்கிங் குழுக்கள் கைப்பற்றி கசியவிட்ட ஆவணங்களைச் சுயாதீன ரஷ்ய ஊடகமான ‘மீடியாசோனா’ (Mediazona) ஆய்வு செய்து இந்த விவரத்தை வெளியிட்டுள்ளது.
2021 செப்டம்பரில் சைபீரியாவின் புடோரானா பீடபூமியில் உள்ள 90 அடி உயர கிடாபோ-ஓரான் (Kitabo-Oron) நீர்வீழ்ச்சிப் பகுதியில் ஜினிச்சேவ் உயிரிழந்தபோது, பாறையிலிருந்து வழுக்கி விழுந்த திரைப்பட இயக்குநர் அலெக்சாண்டர் மெல்னிக்கைக் காப்பாற்ற முயன்றபோது அவர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கசிந்துள்ள ஆவணங்களில் இயக்குநர் மெல்னிக்கின் மரணம் பணியிட விபத்தாகவும் நீரில் மூழ்கியதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஜினிச்சேவின் மரணத்திற்கு தற்கொலையைக் குறிக்கும் ஐந்தாம் எண் குறியீடு இடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 2006 முதல் 2015 வரை புதினின் பாதுகாப்புப் படையில் பணியாற்றிய 55 வயதான ஜினிச்சேவ், 2018-ல் அமைச்சராகப் பொறுப்பேற்று, புதினுக்கு அடுத்தபடியாக முக்கியப் பொறுப்புகளுக்கு வரக்கூடும் எனப் பேசப்பட்டவர் ஆவார்.
அப்போதைய இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு இரங்கல் தெரிவித்த அதிபர் புதின், “ஒரு உயிரைக் காப்பாற்றும் போது, ஒரு நொடி கூடத் தயங்காமல் ஆபத்தை எதிர்கொண்டு, தனது கடமையைச் செய்யும்போது அவர் உயிரிழந்தார்” என்று கூறியிருந்ததுடன், அவருக்கு ‘ரஷ்யாவின் நாயகன்’ (Hero of Russia) என்ற உயரிய விருதையும் வழங்கியிருந்தார். இந்த மரணம் குறித்த மாற்றுக் கருத்துகளை ரஷ்ய அரசாங்கம் ஏற்கனவே புனைகதைகள் என மறுத்திருந்த நிலையில், கசிந்த ஆவணங்கள் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஹேக்கிங் குழுக்கள் மூலம் வெளியான ரஷ்ய இறப்புப் பதிவுத் தரவுகளின் அடிப்படையில் ‘மீடியாசோனா’ வெளியிட்டுள்ள இந்தத் தகவல்கள் சர்வதேச ஊடகங்களில் கவனம் பெற்றுள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்தச் சம்பவம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கும் கசிந்த ஆவணப் பதிவுகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் குறித்துத் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.