Posted in

அமெரிக்காவின் 15 விதிகள் vs ஈரானின் 10 கோரிக்கைகள்: பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் எட்டப்படுமா அமைதி?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் அரசு ஆகியவற்றிற்கு இடையே தற்காலிகப் போர்நிறுத்தம் எட்டப்பட்டுள்ள நிலையில், நிரந்தர அமைதிக்கு இரு நாடுகளும் வெவ்வேறு விதமான நிபந்தனைப் பட்டியல்களை முன்வைத்துள்ளன. அதிபர் டிரம்ப் 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார். இதில் ஈரானின் அணுசக்தித் திட்டங்களை முழுமையாக முடக்குவது, கையில் உள்ள 400 கிலோவுக்கும் அதிகமான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைப்பது மற்றும் ஏவுகணைத் திட்டங்களைக் கைவிடுவது ஆகியவை மிக முக்கியமானவை. இதற்குப் பதிலாக, ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளைத் தளர்த்தவும், முடக்கப்பட்ட நிதியை விடுவிக்கவும் அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது.

மறுபுறம், ஈரான் தனது தரப்பில் 10 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. இதில் யுரேனியம் செறிவூட்டும் உரிமையை அமெரிக்கா அங்கீகரிக்க வேண்டும் மற்றும் கடந்த 45 ஆண்டுகளாக ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள அனைத்து முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பொருளாதாரத் தடைகளையும் முழுமையாக நீக்க வேண்டும் என்பது பிரதானமாக உள்ளது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தியைத் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க விரும்புவதாகவும், மத்திய கிழக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும் என்றும் ஈரான் பிடிவாதமாக உள்ளது. இந்த நிபந்தனைகள் அமெரிக்காவின் “சிவப்புக் கோடுகளை” (Red Lines) மீறுவதாக டிரம்ப் நிர்வாகம் கருதுகிறது.

நாளை இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ள இந்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் சார்பில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் (JD Vance) மற்றும் ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் ஆகியோர் தலைமை தாங்குகின்றனர். டிரம்பின் 15 கோரிக்கைகளும், ஈரானின் 10 கோரிக்கைகளும் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பதால், ஒருமித்த கருத்தை எட்டுவது பெரும் சவாலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. குறிப்பாக, லெபனான் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களை நிறுத்துவது குறித்து ஈரானின் 10 அம்சத் திட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது, ஆனால் அமெரிக்கா அதனை ஏற்க மறுத்து வருவது பேச்சுவார்த்தையில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மத்தியஸ்தம் செய்யும் இந்தப் பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால் மட்டுமே, தற்காலிகமாகத் திறக்கப்பட்டுள்ள ஹார்முஸ் ஜலசந்தி தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும். ஒருவேளை பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், ஈரானின் “நாகரிகத்தையே அழித்துவிடுவேன்” என டிரம்ப் ஏற்கனவே விடுத்துள்ள மிரட்டல் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும். உலகப் பொருளாதாரம் மற்றும் கச்சா எண்ணெய் விலையைத் தீர்மானிக்கும் இந்த “15 vs 10” நிபந்தனைப் போர், நாளை ஒரு முடிவுக்கு வருமா அல்லது மீண்டும் போர் மேகங்கள் சூழுமா என்பதை உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.