Posted in

என்னைக் கொல்லத் துடிக்கிறார்கள்! அமெரிக்க அதிபர் டிரம்ப்பைத் தீர்க்கக் திட்டமிட்ட ஈரான்; இஸ்ரேல் கொடுத்த ரகசியத் தகவல்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை படுகொலை செய்ய ஈரான் நாடு புதிய மற்றும் மிகவும் துல்லியமான சதித்திட்டம் (Assassination Plot) தீட்டியுள்ளதாக இஸ்ரேல் உளவுத்துறை அமெரிக்காவுக்கு அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வாரம் அமெரிக்க அதிகாரிகளிடம் இஸ்ரேல் பகிர்ந்து கொண்ட புதிய மற்றும் ரகசிய உளவுத் தகவல்களின்படி, டிரம்ப்பை குறிவைத்து ஒரு குறிப்பிட்ட தாக்குதல் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ மற்றும் ‘சிஎன்என்’ ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 2020ஆம் ஆண்டில் ஈரானின் முக்கிய ராணுவ தளபதி காசிம் சுலைமானி டிரம்ப் உத்தரவின் பேரில் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கவே ஈரான் பல ஆண்டுகளாக டிரம்ப்பை குறிவைத்து வருவதாகக் கூறப்படுகிறது.

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் கடுமையான ராணுவ மோதல்கள் வெடித்துள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில், இஸ்ரேலின் இந்த புதிய எச்சரிக்கை வாஷிங்டன் மற்றும் தெஹ்ரான் இடையே போர்ப் பதற்றத்தை மேலும் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. துருக்கியின் அங்காராவில் நடைபெற்ற நேட்டோ (NATO) மாநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த அச்சுறுத்தல்களைத் தற்பொழுது பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். “அவர்கள் அமெரிக்கத் தலைவரான என்னைத் தூக்க விரும்புகிறார்கள்; அவர்களின் கொலைப் பட்டியலில் நான் முதலிடத்தில் இருக்கிறேன்” என்று டிரம்ப் ஆவேசமாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேசிய டிரம்ப், “இன்று காலை கூட அவர்களின் அனைத்து கொலைப் பட்டியல்களிலும் என் பெயர் இருப்பதை நான் பார்த்தேன். இதுவரை நான் ஓரளவுக்கு அதிர்ஷ்டசாலியாகவே தப்பித்து வந்துள்ளேன் என்று நினைக்கிறேன், ஆனால் அந்த அதிர்ஷ்டம் இன்னும் நீண்ட காலத்திற்கு நீடிக்காது என அஞ்சுகிறேன்” என்று தனது உயிருக்கு இருக்கும் ஆபத்து குறித்து மிகவும் கவலையுடன் விவரித்துள்ளார். இந்த அச்சுறுத்தல் காரணமாகவே, நேட்டோ மாநாட்டை முடித்துவிட்டு டிரம்ப் அமெரிக்கா திரும்பிய போது, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ் (Secret Service) விடுத்த அவசர வேண்டுகோளின் பேரில் அவரது புதிய சொகுசு விமானத்திற்குப் பதிலாக, பாதுகாப்பு வசதிகள் நிறைந்த பழைய ஏர்ஃபோர்ஸ் ஒன் (Air Force One) விமானத்தில் அவர் அழைத்து வரப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுபுறம், ஹார்முஸ் நீரிணையில் ஈரான் நடத்திய கப்பல் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அமெரிக்கப் படைகள் ஈரானின் முக்கிய ராணுவ இலக்குகளின் மீது வான்வெளித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் முற்றிலும் முறிந்துள்ளதாக டிரம்ப் பிரகடனப்படுத்தியுள்ளார். அதே நேரத்தில், அமெரிக்க உளவுத்துறையைச் சேர்ந்த சில அதிகாரிகள், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான ராணுவ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதற்காக டிரம்ப்பை திசைதிருப்ப இஸ்ரேல் இந்த ரகசியத் தகவலைப் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *